கேளாத செவிகள் கேட்கட்டும் - ‘சிறை’ சொல்லும் 5 முக்கிய பாடம்!
“நீதிமன்றங்கள் திறந்திருப்பது என்னவோ அனைவருக்கும்தான்; நீதி கிடைப்பது சிலருக்கே”, “ஏழையின் சொல் அம்பலம் ஏறாது”. இந்த எதார்த்தத்தைத்தான் சிறை முன்வைக்கிறது.
'சிறை' ஒரு ஃபீல் குட் வகையில் முடிக்கப்பட்டிருந்தாலும், நீதி எளியோருக்கு எளிதில் கிடைத்துவிடுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. 'சிறை' போல் அல்லாமல் மிக யதார்த்தமாக நெஞ்சை உறையவைக்கும் உண்மையுடன் முடிக்கப்பட்ட படம் 'மைனா'. ஒரு வகையில் 'மைனா' தமிழ் சமூகத்திற்கு கொடுத்த ஆறா வடுவிற்கு சிறிய மருந்தாகவே சிறையின் முடிவு காட்சிகள் அமைந்திருக்கின்றன.
அன்பால் இணைந்த மைனாவும், சுருளியும் வாழ்க்கையில் சேர முடியாமலும் வாழவே முடியாமலும் கொல்லப்பட்ட துயரத்தின் நடுவே, அப்துல்லும், கலையரசியும் இருளை கடந்து புது வசந்தத்தில் அடியெடுத்து வைப்பதுபோல் சிறையை முடித்திருப்பது சற்றே மன நிறைவாக தோன்றியது. இருந்தாலும், தொடக்கத்தில் சொன்ன வசனத்தின் பிற்பகுதியை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.. ‘நீதி கிடைப்பது சிலருக்கே’..
இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி செதுக்கியுள்ள (கதை, திரைக்கதை எழுதிய தமிழும்) சிறை படத்தில் இடம்பெற்றிருக்கும் பல்வேறு விஷயங்கள் நிச்சயம் விவாதிக்கப்பட வேண்டியவையே. அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்...
1. குறையை ஏற்க மனமில்லா ஆண்கள்..
சிறை படத்தின் ஆகச் சிறந்த காட்சியாக காவல்நிலைய சம்பவத்தை ரசிகர்களும், விமர்சகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அந்த காட்சிக்கு சற்றும் குறைவில்லாத காட்சி கதாநாயகி கலையரசியின் அக்கா தன்னுடைய கணவருடன் பேசுவது. அக்கதாபாத்திரம் வாயிலாக இயக்குநர் சொல்வது காத்திரமான உண்மை. இப்படி வெளிப்படையான வசனம் தமிழ் சினிமாவில் இடம்பெறுவது அரிதான ஒன்றே.
சொந்தம் விட்டுப்போகக் கூடாது என்பதற்காக கதாநாயகியின் அக்காவை முறைப் பையனுக்கே திருமணம் முடிக்கிறார்கள். அவர்களுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத நிலையில், மருத்துவமனைக்கு சென்று வருகிறார்கள். அக்காவின் கணவரோ அதீத குடிப்பழக்கம் கொண்டவர். பாலுறவு சார்ந்த படங்களை பார்த்துவிட்டு மனைவியிடம் உறவு கொள்ளும் பழக்கம் உள்ளவர். இவையெல்லாம் போகிற போக்கில் இயக்குநர் நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கும் விஷயங்கள்.
”குழந்தைப் பேறு இல்லாத போது சமூகத்தில் அதிக துன்பத்தை அனுபவிப்பது பெண்களே”
ஆண், பெண் என்ற தனிப்பட்ட இருநபர்கள் சம்பந்தப்பட்டதுதான் குழந்தைப்பேறு என்றாலும், அது இல்லாதபோது சமூகத்தில் அதிக துன்பத்தை எதிர்கொள்வது பெண்களே. நாள்தோறும் தான் சந்திக்கும் நபர்களிடமிருந்து - அக்கறையின் பெயரில் - வெளிப்படும் “ஏதும் நல்ல செய்தி இல்லையா” என்ற சொற்களும், கொடுக்கப்படும் அறிவுரைகளும் ஆயிரம் கத்திகளைப் பாய்ச்சுவதற்கு சமமானது. பெண்களின் உறவினர்களே சில நேரங்களில் குத்தலாகவும், சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லிக்காட்டும் நிகழ்வுகள் இன்றும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆண்களும் இந்த வலியை எதிர்கொள்கிறார்கள் என்றாலும் பெண்கள் சந்திக்கும் கொடுமை பல படி மேலானது.
குழந்தை இல்லையென்றால் அது பெண்களின் குறை என்று கருதும் போக்கு இருந்தது. அக்காலத்திய சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் ஏராளம். மிகச்சமீப காலம் வரையிலும் கூட, குழந்தை இல்லாத தம்பதிகளில் பெண்கள் மட்டுமே சிகிச்சைக்கு சென்று வருவார்கள். ஆண்கள் சிகிச்சைக்கு செல்வதை ஒரு கௌரவப் பிரச்னையாக கருதும் நிலை இருந்தது. இம்மனநிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது என்று சொல்லமுடியாது என்றாலும் இருவரும் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் சூழல் தற்போது 'மெல்ல' வளர்ந்து வருகிறது.
குழந்தை இல்லை என்பதை மிகப்பெரிய பிரச்னையாகக் கருதாமல், உடலளவிலான குறைபாடு என எடுத்துக்கொண்டு அதனை சரி செய்ய முயற்சிக்கலாம்; அதை ஏற்றுக் கொண்டும் வாழலாம்.. அப்படியும் இல்லையெனில் குழந்தைகளை தத்தெடுப்பதுகூட ஆரோக்கியமான ஒரு விடைதான். இவையனைத்தும் தனிநபர் விருப்பங்களை பொறுத்தது. ஆனால், சமூகம் கொடுக்கும் அழுத்தம் வேறுவிதமானது. தன்னுடைய ரத்தத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தனிநபர்களிடமிருந்து சமூகம் எதிர்பார்ப்பதும், அந்த அழுத்தத்திற்கு அவர்கள் பலியாவதும்தான் பலரது வாழ்க்கையை கொன்றுவிடுகிறது. இப்படத்தில் காட்டப்படுவது சமூக பிரச்னையாக அது எப்படி மாறியிருக்கிறது என்பதை.
குடிநோய் எப்படி ஆண்கள் மத்தியில் மகப்பேறு சிக்கலை உருவாக்கியிருக்கிறது என்ற உண்மையை பொட்டில் அடித்தார்போல் சொல்லி இருக்கிறார் இயக்குநர். தமிழ் சினிமாவில் பல படங்களில் இதுபோன்ற சூழலை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இயக்குநர் வ.கவுதமன் தான் இயக்கிய மகிழ்ச்சி திரைப்படத்தில் இதனை விவாதித்திருப்பார். பெண்ணுக்கு உடலளவில் பிரச்னை இல்லை என்பது உறுதியான நிலையில், ஆண் மருத்துவமனைக்கு செல்ல எப்படி தயங்குவார் என்பது அப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
”நீ தினமும் குடித்துவிட்டு வந்து..* எப்படி குழந்தை பிறக்கும்”
அந்த வகையில் இந்தப் படத்திலும் கதாநாயகியின் அக்கா வெளிப்படையாகவே தன்னுடைய கணவரிடம் கேட்கிறார். மருத்துவமனைக்கு இருவரும் சேர்ந்து போகலாம் என்று ஆதங்கத்தோடு சொன்னபோதும் அதனை ஏற்க அவன் மறுப்பான். அத்துடன் அதனை சொன்ன மனைவியிடமே ஆத்திரம் கொண்டு கோபப்படுவான். அதன் தொடர்ச்சியாக, ”நீ தினமும் குடித்துவிட்டு வந்து..* எப்படி குழந்தை பிறக்கும்” என்று அவள் கேட்கும் காட்சியில், திரையரங்கில் இருப்பவர்களே ஒரு நொடி திகைத்து போயிருப்பார்கள். பெண்ணின் வலியை மிக நேர்த்தியாக அந்த காட்சியில் இயக்குநர் கடத்தி இருப்பார். ஆனால், கடைசி வரை அந்த ஆண் அந்த வலியை உணர்ந்தே இருக்கமாட்டார். பெண்கள் வேறு வழியே இல்லாமல் அந்த வாழ்க்கையை வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
2. அதிகாரம் யாருக்கு எதிராக?
சிறை திரைப்படம் ஒரு நல்ல காவலரின் கதையாகவே அறியப்பட்டாலும் உண்மையில் விக்ரம் பிரபுவின் கதாபாத்திரத்தை விடவும் அவருடன் வரும் இரு காவலர்களின் சித்தரம்தான் அதிக உண்மையை வெளிப்படுத்துகிறது. இரண்டு வகையில் இதை புரிந்து கொள்ளலாம்; முதலாவது, காவலர்களின் வேலைப் பளு, மற்றொன்று, அதிகாரம் ஒருவனை பற்றிக் கொள்ளும்போது அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பது. இதில், இரண்டாவதை முதலில் பார்க்கலாம்.
படம் முழுவதிலும் பல இடங்களில் பிரச்னைகளுக்குக் காரணமாக இருப்பது சாதாரண மக்களிடம் வம்பிழுக்கும் காவலரின் செயல்தான். நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை. சமூகத்தில் காவலர்களுக்கு ஒரு அதிகாரம் கொடுக்கப்படுகிறது. சமூகத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி, சட்டத்திற்கு உட்பட்டு சரியான திசையில் பயணிக்க வைக்கவும், மக்களின் காவலனாக இருக்கவுமே அந்த அதிகாரம் அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அ அதிகாரத்தை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற தெளிவு இல்லாமல் சுயநலப் போக்கு அதில் கலக்கும்போது 'அதிகாரம்' அர்த்தம் இழந்துவிடுகிறது. அந்தக் காவலர் எல்லா நேரங்களிலும் எளிய மனிதர்களின் மீது தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முயன்று கொண்டே இருக்கிறார். மக்களோடு மக்களாக இருக்கிறோம் என்ற நினைப்பே இல்லாமல் சீருடையில் இல்லாத போதும் எளிய மனிதர்களின் மீது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறார். அதுதான் ஒயின்ஷாப் காட்சியில் அருகில் இருப்பவர் மீது புகைவிடுவதில் மோதல், பேருந்து நிறுத்தத்தில் உடன் சிறுநீர் கழிப்பவரிடம் வம்பிழுப்பது, அத்துடன் கைதி தப்பித்ததில் பேருந்து ஊழியர்களிடம் சண்டைக்கு நிற்பது. அதாவது, இது காவல்துறையினருக்கு என்றுமட்டுமில்லை; அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ள, அதிகாரத்திற்கு நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் இது பொருந்தும். எளிய மக்களிடம், தன்னைவிட வலிமை குன்றியவர்களிடம் தனக்கு கிடைத்த அதிகாரத்தை அவர்கள் எப்படி பிரயோகம் செய்கிறார்கள் என்பது தொடர்ச்சியாக விவாதத்திற்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய குடும்பங்களில் இருந்துதான் கடைநிலைக் காவலர்கள் உருவாகிறார்கள்.
இரண்டாவதாக, கடைநிலை ஊழியர்களுக்கு இருக்கும் பணிச் சூழல் அழுத்தம் அவர்களை எப்படி முரடர்களாக மாற்றுகிறது என்பது. ஆம், எளிய மனிதர்களிடம் அவர்கள் தன்னுடைய அதிகாரத்தை செலுத்தும் அதேவேளையில் அவர்கள் எப்படி அதிகாரத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்களிடம் கிட்டத்தட்ட ஏவல் ஆட்களாக இருக்கிறார்கள் என்பதும் பார்க்க வேண்டியிருக்கிறது. படம் முழுவதும் பார்த்தால் மேல் அதிகாரிகளுக்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர்கள் சொல்வதற்கெல்லாம் செவிமடுப்பவர்களாகவே கடைநிலை காவலர்கள் இருக்கிறார்கள். சிறிய தவறு நடந்தாலும் தான் எப்படி பாதிக்கப்படுவோம் என்பது அவர்களுக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறது.
ஏனென்றால், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய குடும்பங்களில் இருந்துதான் கடைநிலைக் காவலர்கள் உருவாகிறார்கள். அவர்களுக்கு காவலர் பணி என்பது வாழ்வாதத்திற்கான பிரச்னையும் கூட. அதனால் எக்காரணம் கொண்டும் வேலை பறிபோவதை அவர்கள் நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். மற்ற எல்லா அரசுத் துறைகளைப்போலவே ஆள் பற்றாக்குறை பிரச்னை காவல் துறையிலும் கூடுதலாகவே பாதிப்பை ஏற்படுத்துகிறது. உரிமை சார்ந்த விஷயங்கள் காவலர்களுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும். அதனால், கடைநிலை காவலர்களின் வாழ்நிலையை நிதானமாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில், பாதிக்கப்படுபவர்களாகவும், அதன் தாக்கத்தை எளிய மனிதர்கள் மீது செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால், சமூக சூழலில் இருந்துதான் எந்த ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பிரச்னையையும்..
3. பெரும்பான்மையோரின் கௌரவமும் - இடம்பெயர்ந்தோரின் வலியும்!
படம் பேசும் முக்கியமான விஷயங்களில் ஒன்று கதாநாயகனின் குடும்ப பின்னணியும், கதாநாயகியின் குடும்ப பின்னணியும். அதாவது ஒரு கிராமத்தில் பெரும்பான்மையோர் ஒரு சாதியாக, ஒரு மதமாக ஒருங்கிணைந்து வாழும் சூழ்நிலையில், அங்கே சிறுபான்மையாக வாழும் மனிதர்கள் சந்திக்கும் பிரச்னைகள் கவனிக்க வேண்டிய ஒன்று. இதனை ஒரு நிலையில் அல்லாமல் பல படிநிலைகளில் வைத்து இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
கதாநாயகின் குடும்பம் அந்த கிராமத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் சாதிய பின்னணியைக் கொண்டவர்கள் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது. அங்கு கதாநாயகனின் குடும்பம் ஒற்றை குடும்பமாகவோ அல்லது சில குடும்பமாகவோ இருக்கும் (இஸ்லாமிய) பின்னணியை கொண்டுள்ளது. பொருளாதார பின்னணிதான் ஆதிக்கத்திற்கான முதன்மையான காரணமாக இருந்தாலும் சில நேரங்களில் பெரும்பான்மையாக இருப்பவர்கள், எண்ணிக்கையில் குறைவாக இருப்பவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள் என்பதும் நடக்கிறது. களவாணி திரைப்படம் என்னதான் பக்கா கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதன் மையமான செய்தி 5000 தலைக்கட்டு உள்ள கிராமத்திற்கும் 500 தலைக்கட்டு உள்ள கிராமத்திற்கும் தெய்வத்தை எப்படி பொது வழிபாட்டிற்கு வைப்பது என்பதுதான். அர்த்தத்தில் அல்லாமல் எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிப்பது எப்பொழுதும் ஆபத்தே.
நாம் எல்லோரும் ஏதோ ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்களே. அதுதான் வரலாறு. ஆனால், ஒரு கிராமத்தில் நீண்ட நாட்களாக வாழும் குடும்பங்கள் மத்தியில் புதிதாக வந்த குடும்பங்கள் ஒரு வித ஒடுக்குமுறைக்கு தொடர்ச்சியாக ஆட்படுவார்கள். ஓரிடத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு இடத்தில் தன்னுடைய வாழ்க்கையை நிலைப்பெறச் செய்வது என்பது ஒரு மனிதனுக்கு அவ்வளவு எளிதான காரியம் அன்று. கதாநாயகனின் அம்மா சொல்லும் வழிநிறைந்த வார்த்தைகள் அந்த உண்மையை பளிச் சென்று சொல்லும்.
கிராமங்களில் இப்படி புதிதாக வந்து குடியேறியவர்களை குறிக்க பல சொற்கள் உண்டு. சில இடங்களில் கரை காரர்கள் என்று சொல்வார்கள். அதாவது அந்த கிராமத்தில் கடைசியாக வந்து சேர்ந்தவர்கள். கிராமத்தில் தொடக்கத்தில் அவர்களுக்கு முழு உரிமை இருக்காது. காலப்போக்கில் அது மாறும். முள்ளும் மலரும் படத்தில் இயக்குநர் மகேந்திரன் இதனை அழகாக கையாண்டிருப்பார். ரஜினி தன்னுடைய தங்கையுடன் பிழைப்பு தேடிதான் அந்த கிராமத்திற்கு சிறு வயதில் வந்திருப்பார். ஒரு கட்டத்தில் கதாநாயகியும் தன்னுடைய தாயுடன் வாழ வழியில்லாத சூழலில் அந்த கிராமத்திற்கு வருவார். கதாநாயகியின் குடும்பத்தை ஏற்கச் சொல்லும் இடத்தில் ரஜினியின் தங்கை சொல்வாள் ‘நாமும் ஒரு காலத்தில் இப்படித்தானே வந்தோம்..” என்று. இந்தநிலையில், தற்போது அரசியலில் அதிகம் புலக்கத்தில் உள்ள வந்தேறிகள் என்ற வார்த்தை வன்முறையின் உச்சபட்சமான சொல். குடிபெயர்ந்தவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு மிகப்பெரிய பக்குவம் தேவைப்படுகிறது.
எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்றால் தங்களை அமுக்கிக் கொண்டே இருப்பார்கள்.
இப்படத்தில், கதாநாயகனின் மிகப்பெரிய பிரச்னை, ”அவர்களுக்கு என்று கேட்க அந்த ஊரில் யாரும் இல்லை”. அவர்கள் பிழைப்பு தேடி வந்தவர்கள் என்ற குத்தல் அவனை அழுத்திக் கொண்டே இருக்கிறது. என்னதான் உழைப்பால் அவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்து இருந்தாலும் பிழைப்பு தேடி வந்தவர்கள் தானே என்ற சொல் அவர்களுக்கு வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆனாலும், கதாநாயகனின் அம்மாவின் குரல் ஏன் சற்றே உயர்ந்து இருக்கிறது என்பதையும் இதன் அடிப்படையில் புரிந்து கொள்ளலாம். எதிர்த்து குரல் கொடுக்கவில்லை என்றால் தங்களை அமுக்கிக் கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணம் அதற்கு காரணமாக இருக்கலாம். அவர் கேரளாவில் இருந்து வந்தவர் என்பதும் சற்றே கூடுதல் யதார்த்தம். கேரளாவில் இஸ்லாமியர்கள் அதிகம்.
4. காவல்நிலைய காட்சி ஒரு பாடமே!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது வட மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பல இடங்களில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஆனால், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் அமைதியாகவும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறின. அப்படியான சூழலின் ஒரு வெளிப்பாடே தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்துள்ள சிறை திரைப்படமும். இந்தப் படம் இரண்டு கருத்துகளை ஒரே நேரத்தில் தாங்கி இருக்கிறது; ஒன்று கடைநிலை காவலர்கள் சந்திக்கும் பிரச்னைகள், மற்றொன்று இஸ்லாமியர்கள் தங்கள் அடையாளத்தால் சந்திக்கும் சிக்கல்கள்.
தங்கள் படங்களில் இஸ்லாமியர்களை வில்லன்களாக காட்சிப்படுத்தியதை குற்ற உணர்வுடன் சொல்லியிருப்பார் செல்வமணி.
மத நல்லிணக்கத்தின் ஒற்றுமையுணர்வின் தன்மையை காவல்நிலைய காட்சியில் மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தி இருப்பார் இயக்குநர். சமீபத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வணி இப்படத்தின் நிகழ்வில் பேசிய வார்த்தைகளின் வழியாக இதனை புரிந்து கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏற்கனவே ஏற்றிக் கொடுக்கப்பட்ட கருத்துகளின் வழியாக தாங்களும் தங்கள் படங்களில் இஸ்லாமியர்களை வில்லன்களாக காட்சிப்படுத்தியதை குற்ற உணர்வுடன் சொல்லியிருப்பார் செல்வமணி. ஆம், 1990களில் பிற்பகுதியில் இப்படியான படங்கள் தொடர்ச்சியாக வருவது வழக்கமாக இருந்தது.
1998 கோவை குண்டுவெடிப்பும் அதன்பிறகான சூழலும் இஸ்லாமியர்களின் வாழ்வில் எத்தகைய தாக்கத்தை உண்டுபண்ணியது என்பதை படம் தெளிவாக பேசுகிறது.
காவல்நிலைய காட்சியை அதன் முழு வசனத்தில் இருந்தே புரிந்து கொண்டால்தான் சரியாக இருக்கும். ஏனென்றால் அந்த வசனங்களே மொத்த அர்த்தத்தையும் விரிவரித்துவிடும்.
Inspector : gunல எதுக்கு டா புல்லட்ட லோட் பண்ணி வச்சிருக்கிங்க .... Long escort க்கு போகும் போது இப்படி வழக்கமா நாம பண்றது இல்லையே....
Escort AR Police : ( தயங்கி தயங்கி ) அய்யா accused ஒரு மு__ மு_ மு__ முஸ்லிம், அதான் லோட் பண்ணி வச்சிருந்தோம் ....
Inspector : முஸ்லிம் ன்னா சுட்ருவீங்களா டா .... அப்படி ன்னா என்னைய சுடுங்கடா, நானும் முஸ்லிம் தான்.... ( Accused பெயர் அப்துல் ரவூப். இன்ஸ்பெக்டர் பெயர் காதர் பாட்ஷா)
இதுதான் காவல்நிலைய வசனம். அத்தோடு, அந்த காவலர்களை தன்னுடைய காரில் ஏற்றிச் செல்லும் போது..
Inspector - டேய் இதுக்கு முன்னாடி அப்துல் ரவூப் ங்கிற பேர எங்கையாவது கேள்வி பட்டிருக்கிங்களா டா ?
Escort AR Police - அய்யா தெரிலங்கய்யா .... கேள்விப்பட்டதில்ல என்பது போல தலையை ஆட்டுகிறார்கள்....
Inspector - ஈழத் தமிழர்களுக்காக, 1995ல முதன் முதலா தீ குளிச்ச தமிழன் டா.... நாங்களும் மனுசனா, தமிழனா, இந்தியனா தான் டா வாழ்ந்துட்டு வரோம் .... உங்க மத வெறிய வச்சி மனுசன அளக்காதிங்க டா....
இப்படியாகத்தான் முடியும் அந்த வசனம். இந்தகாட்சியின் போது மூணார் ரமேஷ் மிகச் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த கருத்து ஒட்டுமொத்த நாட்டுக்குமே கொண்டு சேர்க்க வேண்டிய கருத்து. மனிதனை அடையாளங்களை கடந்து மனிதனாக பார்க்க கற்றுக் கொள்வது தற்காலத்தில் அவசியமாக உள்ளது.
5. காவல்துறை, நீதித்துறை மீது எழும் கேள்விகள்
காவல்துறை மற்றும் நீதித்துறையில் நிலவி வரும் சிக்கல்கள் குறித்து காலந்தோறும் திரைப்படங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. என்னதான் காவல்துறையை முழுவதுமாக குளோரிபை செய்து படங்கள் வந்தாலும், ”விசாரணை” போன்ற காவல்நியை வன்முறையை உண்மைக்கு நெருக்கமாக சொல்லும் படங்களும் வந்துக் கொண்டேதான் இருக்கின்றன. விக்ரம் வேதா திரைப்படத்தில் என்கவுன்டர்க்கு பின்னணியில் நடக்கும் விஷயங்களை உடைத்துச் சொல்லி இருப்பார்கள். அந்த வகையில் சிறை திரைப்படத்திலும் அதிகார மட்டங்களில் இருக்கும் குறைகளை யதார்த்தத்துடன் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு காவலர் தன்னுடைய குறைந்தபட்ச அதிகாரத்தை வைத்து ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்படுகின்ற, நீதி மறுக்கப்படுகின்ற, சட்டப் போராட்டத்துக்கான வாய்ப்போ, உதவியோ கிடைக்காத மக்களுக்காக உதவி செய்ய வேண்டும்.. அதுவே நம் கடமை, மனிதம்.. இதுதான் சிறை சொல்லும் கருத்து.
இந்தப் படத்தில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் படம் ஒரு நேர்மையாக காவலரின் கதையாக முடிகிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு யதார்த்தத்தில் மிக குறைவானது என்பதை புரிந்து கொள்ள தவறிவிடக் கூடாது. இறுதியில் விக்ரம் பிரபு சொல்வதுபோல் பல நேரங்களில் எளிய மனிதர்களுக்கு எதிராகவே நீதி இருந்து வருகிறது. அப்படியான சூழலில் குறைந்தபட்சம் எதாவது செய்யுங்கள் என்று படம் கோருகிறது.
இந்தப் படத்திற்கு கதை எழுதி திரைக்கதையில் பணியாற்றிய இயக்குநர் தமிழ் ஏற்கனவே டாணாக்காரன் படத்தில் காவலர்களின் பின்னணியை விளக்கி இருப்பார். அவர் காவலராக பணியாற்றியவர் என்பதால் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து உண்மைக்கு நெருக்கமாக கதைகளை உருவாக்கி இருக்கிறார். ஒருவகையில் அவரது வாழ்வில் நடந்த கதையே சிறை படமும். அவர், படத்தில் சொல்வது போல் ஒரு நீதிபதிக்கு பதில் இன்னொரு நீதிபதி மாறும் போதும் முற்றிலும் அணுகுமுறை மாறுகிறது. ஒரு சில நல்லவர்கள் அதிகாரமட்டத்தில் இருப்பதால் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை.
ஏனெனில், ஒரு குற்றத்தை விசாரணைக்கு எடுக்கவே பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் நிலை என்பது வேதனைக்குரியது. தீர்ப்பு சொல்ல அல்ல, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவே இவ்வளவு காலம் ஆகிறது என்றால் தீர்ப்புக்கு எவ்வளவு காலம் ஆகும். அதனால்தான் இஸ்லாமியர் உள்ளிட்ட விசாரணைக் கைதிகள் பலர் சிறைகளில் நீண்ட நாட்கள் விடுதலை கிடைக்காமல் வாடிக்கிடக்கிறார்கள். அத்துடன், எளிய மனிதர்கள் வழக்கறிஞர் வைத்து தொடர்ச்சியாக தங்களுக்காக வாதாட முடியாத சூழலும், அப்படியே அரசு வழக்கறிஞர் கிடைத்தாலும் அவர்களின் பொறுப்பற்ற தன்மையும் நீதியை கிடைக்கவிடாமல் செய்கிறது.
"கேளாத செவிகள் கேட்கட்டும்" என்பது பகத் சிங் பயன்படுத்திய மிக முக்கியமான முழக்கம். விடுதலையின் செய்தியை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அந்த முழக்கம் பயன்பட்டது. அந்த வகையில் இந்தப் படத்தின் செய்தியும் "கேளாத செவிகள் கேட்கட்டும்".
இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி-க்கு ஒரு சல்யூட்..

