“PTR சார் விளக்கம் கொடுத்திருக்காரு” - விஜய்சேதுபதி சொன்ன அமைச்சர் PTR-ன் விளக்கம் என்ன தெரியுமா?

‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு குறித்து பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி - அமைச்சர் பிடிஆர்
விஜய் சேதுபதி - அமைச்சர் பிடிஆர்புதிய தலைமுறை

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை கத்ரினா கைஃப் நடித்து மாபெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 12ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தினை இயக்குநர் ஸ்ரீராம் என்பவர் இயக்க, ராதிகா ஆப்தே, காயத்ரி சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவெண்ட்டில் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஜய் சேதுபதி இந்தி திணிப்பு குறித்து பேசிய காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளர் சந்திப்பில் அவரிடம் ‘இந்தி தெரியாது என்ற கொள்கையில் எதிராக 75 வருடங்களாக தமிழ்நாடு குறிக்கோளாக உள்ளது’ என்ற தொணியிலான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “இங்கு யாரும் இந்தி படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறுகின்றனர். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

இங்கு இப்போதும் இந்தி படித்து கொண்டுதான் இருக்கிறார்கள். யாரும் அதை தடுக்கவில்லை. உங்கள் கேள்விக்கான விளக்கத்தினை பிடிஆர் அவர்கள் ஒரு பேட்டியில் வழங்கியுள்ளார். அதை பாருங்கள்” என்றார்.

இதையடுத்து இந்தி திணிப்பு குறித்து அமைச்சர் பிடிஆர் பேசிய காணொளியும் விஜய் சேதுபதியின் காணொளியோடு சேர்ந்து வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியது இதுதான் - “80, 90 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் அரசியலுக்கு இந்தி கட்டாயம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அதில் ஒரு மிகப்பெரிய பிரச்னை உள்ளது.

அத்தியாவசியமற்ற மொழி என்று நாங்கள் கருதும் சில மொழிகளை நீங்கள் எங்களுக்கு கட்டாயப்படுத்தினால், விரைவில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளுமே எங்களுக்கு இரண்டாம் அல்லது மூன்றாம் தர நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.

பெரும்பாலான கலாசாரங்களில் மொழி அவர்களின் அடையாளத்தின் மையமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

அந்த உணர்வில் பேரறிஞர் அண்ணா சொன்னது போல எனக்கு இருமொழிக் கொள்கை இருந்தால் முதல் மொழியாக தமிழ்தான் தேர்ந்தெடுப்பேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் முதலில் தங்கள் தாய்மொழியையே விரும்புகிறார்கள். அதன் பிறகு, ஆங்கிலம். ஏனென்றால் மாநிலங்கள், நாடுகள் கடந்து ஆங்கிலம் ஒரு தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. நான் வணிக ரீதியாக உலகில் போட்டியிடும்போது மதிப்பு சேர்க்கக்கூடியதாக ஆங்கிலம் அமைகிறது.

அப்படி இருக்க நான் ஏன் இந்தி கற்க வேண்டும்?

விஜய் சேதுபதி - அமைச்சர் பிடிஆர்
“முதலீட்டாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை” - எல்.முருகன்

நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்ததுபோல மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தினால், நீங்கள் திறம்படச் சொல்வது, ‘இந்தி அதிகம் பகுதியில் உள்ளவர்கள் ஆங்கிலத்தினை இரண்டாம் மொழியாகக் கற்க முடியாது’ என்பதுதான்.

இதன்மூலம் இந்தி பேசும் மாநிலங்கள் ஒரு மொழிக் கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கின்றீர்கள். இதன்மூலம் அவர்களுக்கு இந்தி மட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை மூன்று மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ஏன் மூன்று மொழி கொள்கை தேவை? அவர்களுக்கு ஒன்று, எனக்கு மூன்றா?

விஜய் சேதுபதி - அமைச்சர் பிடிஆர்
உலக முதலீட்டாளர் மாநாடு; இன்று நடக்கப்போவதென்ன?

இதனால்தான் இந்தியை திணிப்பதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். தானாக முன்வந்து இந்தி பேச விரும்புபவர்களிடம் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.

சுதந்திரத்தின் போது மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படியானால், நமக்கு ஏன் ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், மத்தியப்பிரதேசம்? அவர்கள் அனைவரையும் இந்தி பேசும் பகுதிகள் என்று கருதிக்கொண்டால், அவர்களின் அனைத்து மூல மொழிகளுக்கும் என்ன ஆனது? அந்த மொழிகளுக்கு இன்று என்ன நடந்ததோ, அதுவே இந்தியை தொண்டைக்குள் தள்ளினால் இங்கும் நடக்கும். அதனால் எங்களுக்கு இந்தி வேண்டாம்” என்று கூறியிருந்தார். பிடிஆர் பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com