’தண்டகாரண்யம்’.. சமூகத்துக்குச் சொல்ல வருவது என்ன?
தமிழ் சினிமா கவனம் செலுத்தாத ஒரு கதைக் களத்தை கொண்ட திரைப்படமாக வெளியாகியுள்ளது ’தண்டகாரண்யம்’. இப்படம் சமூகத்துக்குச் சொல்ல வருவது என்ன? விரிவாக பார்க்கலாம்...
மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின இளைஞரின் கனவையும், காதலையும் ஒருசேர பேசும் ஓர் அரசியல் படைப்புதான் ‘தண்டகாரண்யம்’. கிருஷ்ணகிரியில் தற்காலிக வனக்காவலராக பணியாற்றும் இளைஞரின் காதலையும், காடுகளையும் தொடக்கத்திலியே ரம்மியமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் காளிராஜா. நாயகனின் அண்ணனாக சடையன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அட்டகத்தி தினேஷ், காடுகளின் கனிமவளங்களை அங்கு இருக்கும் அதிகாரம் படைத்தவர்கள் கொள்ளையடிப்பதை எதிர்க்கிறார். காடுகளைப் பாதுகாக்கும் பழங்குடியினர்கள் மீது போடப்படும் போலி வழக்குகளையும் எதிர்த்துக் கேள்வி எழுப்புவதால் எதிர்தரப்பினரின் பெரும் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறார்.
விளைவு... தம்பியும், படத்தின் நாயகனுமான கலையரசனுக்கு அரசுப்பணி கிடைக்காமல் கைநழுவிப் போகிறது. அரசுப்பணி கனவு தகர்ந்துபோக, வேறு வழியின்றி ராணுவ முகாமில் பயிற்சி என நம்பி, நாயகன் கலையரசன் ஜார்க்கண்ட் செல்கிறார். அதற்காக, அவரை நிலத்தை விற்று குடும்பத்தினர் அனுப்பும் காட்சிகள் இதயத்தை நொறுக்குகின்றன.
அதன்பிறகுதான் கதையில் திருப்புமுனை ஏற்படுகிறது. பழங்குடியின இளைஞர்களை நக்சல்களாக ஏற்றுக்கொள்ள வைக்கும் போலீஸார் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் கோர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குநர் அதியன் ஆதிரை. காதலனும், காதலியும் வெகுதூரத்தில் இருந்தாலும், அவர்களை நினைவுகள் ஒன்று சேர்க்கிறது. அதற்கேற்ப இசைஞானியின் கானம் ஆன்மாவை வருடத் தவறவில்லை. பாடலாசிரியர் உமாதேவியின் இலக்கிய வரிகளுக்கு justin பிரபாகரனின் உயிர் ஊட்டிய இசை அற்புதம்.
தொகுப்பாளர் செல்வா கூடுதல் வலுசேர்க்கிறார். கடைசியில் உண்மை தெரிந்து முகாமில் இருந்து தப்ப முயற்சிக்கிறார் நாயகன் கலையரசன். ஆனால் அவரது கனவு சிதைவது மட்டுமின்றி, ஒரு தலைமுறையின் கனவே சிதைவதை காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், புதைந்துகிடக்கும் சில உண்மைகளை தோலுரித்து காட்டியுள்ளார். புராணமோ, புனைவோ, நிஜக் கதையோ... அநீதியை கண்டு எளிய மக்கள் வெகுண்டெழுவார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.