`வேட்டுவம்' ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானர் படம்! - பா இரஞ்சித் | Pa Ranjith| Vettuvam | Sarpatta 2
தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படக்கூடிய இயக்குநராக இருப்பவர், பா இரஞ்சித். தற்போது இவர் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய 'தண்டகாரண்யம்' படம் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேட்டி ஒன்றில் சமீபத்தில் பேசிய பா இரஞ்சித், தான் அடுத்து இயக்கும் படங்களை பற்றி பகிர்ந்துள்ளார்.
"ஒரு கேங்க்ஸ்டர் படமாக இருக்க வேண்டும் என தான் `வேட்டுவம்' கதையை எழுதினேன். அந்த ஸ்க்ரிப்ட் எழுதி முடித்ததும் இது ஒரு கேங்க்ஸ்டர் படமாகதான் இருக்கும் எனத் தோன்றியது. நாம் ஏன் இதை செய்ய வேண்டும், இதன் மூலம் என்ன சொல்லப்போகிறோம் என யோசித்த போது, அதிகார போட்டிதான் மையமாக இருந்தது. அதிகாரம் பற்றியதுதான் என முடிவானதும், அதை ஏன் நாம் இப்படி சொல்ல வேண்டும் என்ற கேள்வி வந்தது. எனவே அதன் கதாப்பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு வேறு ஒரு உலகை உருவாக்கினேன். சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் Futureastic Drama படத்தில் இருக்கிறது. ஒரு சுவாரஸ்யமான படமாக, எல்லோரும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும் என நம்புகிறேன்.
'சார்பட்டா 2' படத்தின் கதை எழுதிவிட்டோம். `வேட்டுவம்' ஜூலையிலேயே முடிக்க வேண்டியது, ஆனால் படம் எடுக்க எடுக்க பெரிதாகி கொண்டே போனது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு செய்துவிட்டால் முடிந்துவிடும். இது முடிந்ததும் ஏற்கனவே எழுதப்பட்ட 'சார்பட்டா 2' படத்தின் கதையை எடுத்து, மெருகேற்ற வேண்டும். அது ஒரு அரசியல் படமாக இருக்கும். படத்தில் பாக்சிங் சார்ந்த காட்சிகளும் சிறப்பாக வந்திருக்கின்றது. இது சீக்குவலா, ப்ரீகுவலா என முடிவாகவில்லை. ஆனால் அந்த உலகத்தை மீண்டும் ஒருமுறை கொண்டுவர முயற்சிக்கிறோம். அப்படித்தான் நானும் தமிழ்பிரபாவும் திரைக்கதையை எழுதி இருக்கிறோம்." எனக் கூறியிருக்கிறார் பா இரஞ்சித்.