"கார்த்தியை சம்மதிக்க வைப்பதுதான் சவாலாக இருந்தது; அவர் கேட்ட கேள்விகள்.." - நலன் குமாரசாமி கலகல
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' டிசம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
"`சூது கவ்வும்' கேலியாக வைத்த தலைப்பு ; அப்போது.."
இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் நலன் குமாரசாமி பேசிய போது, "9 வருடத்திற்கு பிறகு என் படம் வருகிறது என்பது மாதிரியான போஸ்ட் எல்லாம் காட்டினார்கள். நியாயப்படி நீங்கள் எல்லோரும் பயப்பட வேண்டும். `ஒன்பது வருஷம் படம் எடுக்காம இருந்தான், இவன் என்ன பண்ணப்போறானோ' என, ஆனால் எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
சூதுகவ்வும் முடித்த உடன் எஸ் ஆர் பிரபு சார் என்னை அழைத்து பேசினார். `சூது கவ்வும்' என்ற தலைப்பில் எல்லாம் படம் எடுக்கலாமா? என்று கேட்டார். ஐயா அது ஒரு கேலியாக வைத்த தலைப்பு. கண்டிப்பாக ஒருநாள் `தர்மம் வெல்லும்' என ஒரு படம் எடுப்போம் என வாக்கு கொடுத்தேன். அந்த தர்மம் வெல்லும் தான் இந்தப் படம், எங்கள் வாக்கை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்.
"கார்த்தியை சம்மதிக்க வைப்பதுதான் சவாலாக இருந்தது"
இதில் கார்த்தி சார் தான் பொருந்துவார் என மிக சுலபமாக முடிவு செய்துவிட்டோம். ஆனால் அவரை சம்மதிக்க வைப்பது தான் சவாலாக இருந்தது. அவர் கேட்ட சில கேள்விகள் இந்தக் கதைக்கு பயனுள்ளதாக மாறியது. அந்த வகையில் இது அவருக்கு மிக பொருத்தமான படம். மேலும் இந்தப் படத்துக்காக எம் ஜி ஆர் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்ததும் அவரின் மீதான மரியாதை கூடியது. அவரை பின்பற்றும் பலருக்கும் எந்த கேட்ட பழக்கமும் கிடையாது. பலரை அவர் பொறுப்பானவர்களாக மாற்றி இருக்கிறார். அவரின் அந்த குணத்துக்காவே இந்தப் படம் சமர்ப்பணம்.
"அடுத்த படம் இரண்டு வருடங்களில் கொடுப்பேன்"
இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் என்பது, ஒரு கரும்பு மிஷினுக்குள் போய் வந்த மாதிரி தான் இருந்தது. உடல் ரீதியாக இது கடினமான வேலை. உளவியல் ரீதியாக இது என்னுடைய மென்பொருளை அப்டேட் செய்த படமாக தான் சொல்வேன். இந்தப் படத்திற்கு எனக்கு வாய்ப்பளித்த புரட்சி தலைவர் எம் ஜி ஆருக்கு என்னுடைய நன்றி. கார்த்தி சார், ஞானவேல் சார் அவர்களால் தான் இந்தப் படம் வெளியே வருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், இந்தப் படம் வெற்றியடைந்தால் அதையே என் நன்றியாக வைத்து கொள்ளுங்கள். உங்களுடன் பணியாற்றிய அனுபவத்தை உங்களுடைய நன்றியாக நான் எடுத்துக் கொள்கிறேன். அடுத்த படம் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் கொடுப்பேன்" என்றார்.

