`கெணத்த காணோம்' | மறைந்த `கிடாயின் கருணை மனு' இயக்குநரின் கடைசி படம்!
சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் 'கெணத்த காணோம்' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. கிராமத்து பின்னணியில் நகைச்சுவை, அபத்தங்களை பேசும் இப்படம், சுரேஷ் சங்கையாவின் கடைசி படமாகும். விதார்த் நடித்த 'ஒரு கிடாயின் கருணை மனு' மூலம் அறிமுகமான அவர், உடல் நலக்குறைவால் 2024ல் காலமானார்.
விதார்த், ரவீணா ரவி நடித்த `ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. கிராமத்து பின்னணியின் நடக்கக்கூடிய சுவராஸ்யமான படமாக நல்ல வரவேற்பை பெற்றது இந்தப் படம். அதன் பின்னர் பிரேம் ஜி நடித்த `சத்திய சோதனை' படத்தை இயக்கினார். உடல் நலக்குறைவு காரணமாக 2024ம் ஆண்டு காலமானார் சுரேஷ் சங்கையா.
மறைந்த சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்து தராயாகியுள்ள `கெணத்த காணோம்' படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. யோகி பாபு கதாநாயக நடிக்கும் இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
`பைசன்', `தாய்கிழவி' மூலம் கவனம் பெற்ற நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இது அன்றாட வாழ்க்கையில் இருக்கும் நகைச்சுவை, அபத்தங்கள் போன்றவற்றை பேசும் கிராமத்து பின்னணியில் நடக்கும் காமெடி படமாக உருவாகி இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

