`தலைவர் 173' இயக்குநர் இவரா? அறிவிப்பு வர தாமதம் ஏன்? | Thalaivar 173 | Rajini | Kamal
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் படம் `தலைவர் 173'. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவதாக அறிவித்ததும் பின்னர் அவர் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டதும் நாம் அறிந்ததே. இப்போது இருக்கும் கேள்வி `தலைவர் 173' படத்தை இயக்கப் போவது யார்? என்பதே. இந்தப் படத்திற்காக 8 இளம் இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது இந்தப் படத்தை இயக்குவது யார் என்பது கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
`பார்க்கிங்' படம் மூலம் கவனம் ஈர்த்த ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் `தலைவர் 173' பட இயக்குநர் என சொல்லப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக இந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட வேண்டும், ஆனாலும் ஏன் தாமதம் என்றால் சிம்பு - ராம்குமார் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட படம்தான் காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம். அந்தப் படம் அறிவிக்கப்பட்டு, படத்துக்கான பூஜையும் கூட நடைபெற்றது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சில சிக்கல்களை எதிர்கொண்டதால், ஷுட் துவங்காமல் இருந்தது. இப்போது இந்தப் படம் நடக்குமா என்ற நிலையும் உருவாகி இருக்கிறது. ஏனென்றால் சிம்பு அடுத்தாக வெற்றிமாறன் இயங்கும் `அரசன்' படத்தில்தான் நடிக்க போகிறார். எனவே ராம்குமார் படத்தில் அவரால் உடனடியாக நடிக்க முடியாது.
எனவே தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸிடம் தடையில்லா சான்றிதழ் (NOC) ஒன்றை வாங்கும் பணிகளில் ராம்குமார் இருப்பதாகவும், அது கிடைத்த உடனே `தலைவர் 173' பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் எனவும் சொல்லப்படுகிறது. இது உண்மை எனும் பட்சத்தில் மிக இளம் வயதில் ரஜினியை இயக்கும் இயக்குநர்களில் ஒருவராவார் ராம்குமார் பாலகிருஷ்ணன்.

