”இந்த துறையை கெடுத்ததில் முதல் ஆள் நீங்கள்தான்” - ஆர்.கே.செல்வமணி கேள்வியால் எழுந்த விவாதம்!
சதாசிவம் இயக்கத்தில் குரு லக்ஷ்மன், பாடினி குமார் நடித்துள்ள `ஹார்டிலே பேட்டரி' சீரிஸின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் மற்றும் FEFSI தலைவர் ஆர் கே செல்வமணி ஓடிடி தளங்கள் படங்களை வாங்குவதில்லை என்ற கருத்துக்களை முன்வைத்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக Zee 5 கௌஷிக் தன் கருத்துக்களை முன்வைத்தார்.
இதில் பேசிய ஆர் கே செல்வமணி,
"இன்று திரைப்பட துறையில் அங்கீகாரம் பெற்ற நபர்களையோ கலைஞர்களையோ நீங்கள் ஓடிடியில் பயன்படுத்துகிறீர்கள். அதே போல திரைப்பட துறையும் உங்களால் பயன்பெற வேண்டும். எனவே திரைப்பட துறையை வாழவைக்க வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.
”இந்த துறையை கெடுத்தில் முதல் ஆள் நீங்கள் தான்”
எனவே இந்த இடத்தில் சேனல்களுக்கு, ஓடிடி தலங்களுக்கும் நான் வைக்கும் வேண்டுகோள் என்ன என்றால், நீங்கள் வந்த புதிதில் அதிகமான விலையை கொடுத்து எங்களை கெடுத்துவிட்டீர்கள். இந்த துறையை கெடுத்தில் முதல் ஆள் நீங்கள் தான். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுக் கொண்டிருந்தோம். 10 கோடி சம்பளம் வாங்கும் நபரை 100 கோடியில் சென்று நிறுத்தினீர்கள். இன்று எங்களுக்கு நஷ்டம் ஆகிறது என படம் வாங்குவதை நிறுத்தி விட்டீர்கள். நீங்கள் நிறுத்திவிட்டாலும், சம்பளத்தை உயர்த்தியவர் யாரும் இறங்கி வரவில்லை. உச்சாணி கொம்பிலே அமர்ந்திருக்கிறார்கள், நாங்கள் கீழேயே நிற்கிறோம். அவர்களும் இறங்குவதாய் இல்லை, ஏற்றிவிட்டவர்களும் கடையை சாத்தி கிளம்பிவிட்டீர்கள்.
”தியேட்டரில் ஓடியவரை தயாரிப்பாளருக்கு பணம் வந்தது..”
இப்போது பெரிய படங்கள் ஷூட் போவதற்கே கஷ்டமாக இருக்கிறது. அதனால் திரைத்துறையுடன் கலந்து பேச வேண்டும். சினிமா நன்றாக இருந்தால் தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். நாங்கள் எடுத்தால் தான் நீங்கள் ஒளிபரப்ப முடியும். இதை Zee 5க்கு மட்டும் சொல்லவில்லை, அனைத்து ஓடிடி மற்றும் சேனல்களுக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன்.
தமிழ் சினிமா இன்று மிக சிரமரான நிலையில் இருக்கிறது. தியேட்டரில் ஓடியவரை தயாரிப்பாளருக்கு பணம் வந்தது. ஆனால் மற்ற தளங்களில் பார்வையாளர்கள் அதிகரித்த போதும், அதிலிருந்து தயாரிப்பாளருக்கு முறையாக பணம் வருவதில் சிக்கல் இருக்கிறது. இந்த வருடம் 300 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் 15 தயாரிப்பாளரை தவிர மீது அனைத்து தயாரிப்பாளரும் நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்கள். இதில் 250 பேர் சினிமா வேண்டாம் என சென்றுவிடுவார்கள்.
நாங்கள் மீண்டும் முயற்சித்து புதிதாக 300 பேரை அழைத்தது வருவோம். அவர்களை வைத்து படத்தை எடுப்போம். இப்படி ஆட்கள் சென்றுவிடாமல் மீண்டும் மீண்டும் தயாரிப்பாளர் படம் எடுக்கும் சூழலை உருவாக்குங்கள். 90ல் நான் படம் தயாரிக்க துவங்கி 16 படங்கள் எடுத்தேன். அதன் பிறகு படம் எடுக்க முடியாது என நிறுத்திவிட்டேன். தாணு சார் எப்படி இன்றுவரை எடுக்கிறாரோ தெரியவில்லை.
”நீங்களே எல்லா படங்களையும் தயாரித்துவிட முடியாது”
முன்பெல்லாம் 50 சதவீத ஆபத்து இருக்கும், இன்று 200 சதவீத ஆபத்தாகிவிட்டது. 5 கோடியில் படம் எடுத்தால் நஷ்டம் 10 கோடியாக இருக்கிறது. தயாரிப்பாளர் நன்றாக இருந்தால் தான் தொழிலார்கள், ஓடிடி தளங்கள் நன்றாக இருக்க முடியும். நீங்களே எல்லா படங்களையும் தயாரித்துவிட முடியாது. ஒரு தயாரிப்பாளருக்கு தொடர்ந்து படம் எடுக்கும் சூழல் உருவாக்குதோ அப்போதுதான் இந்த துறை ஆரோக்யமாக மாறும்" என்றார்.
தொடர்ந்து படம் வாங்குவதில் உள்ள சிக்கல் பற்றி Zee 5 கௌஷிக் பேசும் போது,
"நாங்கள் செய்த சில புராஜெக்ட்ஸ் சுமாராக ஓடி இருக்கிறது, சில புராஜெக்ட்ஸ் பிரமாதமாக ஓடி இருக்கிறது. கன்டன்டை கிங்காக என்று நினைக்கிறோமோ, அன்று எல்லா புராஜெக்டும் நன்றாக ஓடும். அதில் நாம் கோட்டை விட்டுவிட்டு, அலங்கார வேலைகள் பார்த்தல், வரவேற்பு கிடைக்கும் என நினைத்து படங்கள் எடுக்கிறார்கள். அதெல்லாம் ஓடாது. எல்லாருடைய படங்களையும் வாங்க யாரும் தயாராக இல்லை.
”நாங்களும் காசுபோடுறம்.. அது திரும்பி வரணும்!”
சேட்டிலைட் காரரும் ஒரு காசு போடுகிறார், ஓடிடியும் ஒரு காசு போடுகிறது அது அவர்களுக்கு திருப்பி வரவேண்டும் அல்லவா. அது வராது என தெரியும் போது எதற்காக அவர் முதலீடு செய்ய வேண்டும்? ஒவ்வொரு சாப்ஸ்க்ரிப்ஷனும் மக்களிடம் இருந்து வருகிறது. எனவே நாங்கள் உங்களுக்கு நல்ல கன்டென்ட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மறுபடி எங்களிடம் வருவீர்கள். இல்லை என்றால் நாங்கள் உங்களை ஏமாற்றுவது போல ஆகிவிடும். எனவே எல்லா புராஜெக்டும் வாங்க முடியாது. நல்லவற்றையே வாங்க முடியும்" என்றார்.

