”துப்பாக்கி இப்போ?” | ஜனநாயகன் vs பராசக்தி மோதல் வலுக்கும் காரணம் என்ன? | Vijay | Sivakarthikeyan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் பட்டியலில் முதன்மையானவர் விஜய். இப்போது இவர் நடிப்பில் வெளியாகும் கடைசி படமாக தயாராகி வருகிறது `ஜனநாயகன்'. இதே பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதாகோங்கரா இயக்கியுள்ள `பராசக்தி' படமும் ஜனவரி 14 வெளியாக உள்ளது. இரண்டு படங்களுக்கு இடையே ஒரு இடைவேளை இருந்தாலும், பொங்கல் ரேஸில் விஜயுடன் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன் என்று தான் பார்க்கிறார்கள் ரசிகர்கள். எனவே சமூக வலைத்தளங்களிலும் அது பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி எழுவதுண்டு.
குறிப்பாக GOAT படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் துப்பாக்கி கொடுத்த பின்பு, அடுத்த விஜய், சிவா தான் எனப் பெரிய பேச்சுக்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்தே இப்படியான கருத்து மோதல்கள் வளர துவங்கின. இப்போது இந்த போட்டிக்கு மேற்கொண்டு எண்ணை ஊற்றும் விதமாக பராசக்தி படத்தில் இருந்து `அடியே அலையே' பாடல் வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையில் 100வது படமாக உருவாகியுள்ளது இப்படம். இப்பாடலை ஷான் ரோல்டன் - தீ பாடி இருந்தனர். இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்கு இரண்டு நாள் கழித்து விஜயின் ஜன நாயகன் படத்தில் இருந்து முதல் பாடலான `தளபதி கட்சேரி' பாடல் வெளியானது. அனிருத் இசையில் அறிவு வரிகளில் விஜய், அனிருத், அறிவு ஆகியோர் இப்பாடலை பாடியிருந்தனர். பாடல் வெளியாகி 30 நிமிடங்களில் 10 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றது. இப்போது பாடல் வெளியாகி 4 நாட்களில் 4 கோடிக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது. அதே சமயம் 6 நாட்கள் ஆகியும் `பராசக்தி' பாடல் இதுவரை 1 கோடி + வியூஸ் மட்டுமே பெற்றுள்ளது. இதனை எடுத்துக் கொண்டு, இரு பாடல்களையும் ஒப்பிட்டு ஒரு மோதலை நடத்துகிறார்கள் ரசிகர்கள்.
விஜய் என்ற பெரிய நட்சத்திரம், அவரின் கடைசி படம், அனிருத் இசை எனப் பல விஷயங்கள் ஜனநாயகனுக்கு உண்டு. அதனுடன் சிவாவின் பராசக்தியை ஒப்பிடுவதே முதலில் அபத்தமான ஒன்று. இது பற்றிய கருத்துக்கள் ஒருபக்கம் என்றாலும், இதற்கு பின் வேறு காரணம் இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகின்றது. விஜயின் ஜனநாயகன் வெளியாகும் அதே பொங்கலுக்கு பராசக்தி படத்தை வெளியிடுவதற்கு பின் அரசியல் நோக்கம் உள்ளது என்பது பல நாட்களாக உலவும் ஒரு தகவல்.
ஏனென்றால் பராசக்தி படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட் நிறுவனம். எனவே பாடலையும், இரு படங்களையும் முன்வைத்து நடத்தப்படும் சண்டைகள் வெறுமனே ரசிகர்கள் சண்டையாக மட்டும் இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. எது எப்படியோ, இந்த சண்டைகள் எதுவும் படத்தை வெற்றி பெற வைக்கப்போவதில்லை. எந்தப் படம் நன்றாக இருக்கிறதோ அது ஹிட்டாக போகிறது.

