பாலிவுட்டின் ’ஹீமேன்’ : தர்மேந்திராவின் வாழ்க்கைப் பயணம்.. ஓர் பார்வை !
பாலிவுட்டின் 'ஹீ மேன்' ஆக கொண்டாடப்பட்ட தர்மேந்திரா, 6 தசாப்தங்களாக திரையுலகில் ஆட்சி செய்தவர். பஞ்சாபில் பிறந்த அவர், 1960ல் 'தில் பி தேரே ஹம் பி தேரே' மூலம் அறிமுகமானார். 300க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ள அவர், பல மொழிகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 2012ல் பத்ம பூஷன் விருது பெற்றிருக்கிறார்.
மீசை மழிக்கப்பட்ட முகத்தின் கட்டழகு, ரசிகைகளை கவரும் வசீகரத் தன்மை, பன்முக நடிப்பாற்றல்... இவை தர்மேந்திராவின் அடையாளங்களில் சில... வலிமையான தோற்றப்பொலிவை காட்டும் உடலைமைப்பும், ஆக்ஷன் காட்சிகளில் அவர் காட்டும் ஆக்ரோஷமும், யதார்த்தம் மேலோங்கும் உடல்மொழியும் பாவனைகளும்தான் பாலிவுட்டின் ’ஹீ மேன்’ என தர்மேந்திராவை அடையாளம் காட்டின. அதனால்தான் 6 தசாப்தங்களாக இந்தி திரையுலகை அவரால் ஆட்சி செய்ய முடிந்தது.
பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட தர்மேந்திரா, அங்குள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் பிறந்தவர். படித்தது 12ஆம் வகுப்பு வரை மட்டுமே. தரம் சிங் தியோல் என சிறுவயதில் அறியப்பட்டவர், தர்மேந்திராவாக அரிதாரம் பூசி, திரையுலகின் புதிய நாயகனாக அவதாரம் எடுத்தார். ஃபிலிம்பேர் பத்திரிகை நடத்திய திறமை வேட்டையில் பெற்ற வெற்றிதான் திரைநாயகனாகும் ஆசையை அவருக்குள் துளிர்விடச் செய்தது. பஞ்சாபில் இருந்து மும்பைக்கு பயணப்பட்டார். திரையுலகில் அடியெடுத்து வைக்கும் முன்னரே குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் 19 வயதிலேயே அவருக்கு திருமணம் நடந்து முடிந்திருந்தது. 1960ஆம் ஆண்டு தமது 24ஆவது வயதில் ’தில் பி தேரே ஹம் பி தேரே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதன்பின்னர், ”சீதா ஆர் கீதா, சுப்க்கே சுப்க்கே, தரம்வீர், மேரே கோன் மேரே” என பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், 1975ஆம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் அவர் இணைந்து நடித்த ’ஷோலே’ எம்மொழியினருக்கும் காலத்தால் காவியம்.
ஹிந்தியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா, தம் தாய்மொழியான பஞ்சாபியிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவற்றை தொடர்ந்து பெங்காலி, போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 1954இல் தர்மேந்திரா-பிரகாஷ் கவுர் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சன்னி தியோல், பாபி தியோல் என இரண்டு ஆண் பிள்ளைகள். தந்தைக்கு சளைத்தவர்களா பிள்ளைகள். இவ்விருவருமே பாலிவுட்டில் இப்போது பிரபலங்கள்...
தர்மேந்திரா- பிரகாஷ் கவுர் தம்பதிக்கு விஜய்தா, அஜிதா என இரண்டு மகள்களும் உள்ளனர். இதன் பின்னர், 26 ஆண்டுகளுக்கு பின் 1980இல் சக பாலிவுட் கனவு நாயகியான தமிழகத்தை சேர்ந்த ஹேமாமாலினியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஹிந்து திருமணச் சட்டம் இதற்கு இடமளிக்கவில்லை என்பதால், இஸ்லாமியராக மதம்மாறி ஹேமாமாலினியை தர்மேந்திரா திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், பின்னாளில் அதனை மறுத்தார் தர்மேந்திரா. இஷா தியோல், ஆஷானா தியோல் ஆகியோர் இந்த தம்பதிக்கு பிறந்தவர்கள். பஞ்சாபின் கண்டலாவில் ஒரு குடும்பம், மும்பையில் ஒரு குடும்பம் என இரு குடும்பங்களையும் சரிசமமாக கவனித்துவந்தார் தர்மேந்திரா.
1987ஆம் ஆண்டில் மட்டும், இவர் தொடர்ச்சியாக 7 வெற்றிப் படங்களையும், மொத்தமாக 9 வெற்றிப் படங்களையும் கொடுத்து, இன்றுவரை முறியடிக்கப்படாத ஒரு சாதனையைப் படைத்துள்ளார். சினிமாவில் தர்மேந்திரா ஆற்றிய பங்களிப்புக்காக, இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமகன் விருதான பத்ம பூஷன் விருது 2012ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
அரசியல் களத்தையும் தர்மேந்திரா விட்டுவைக்கவில்லை. 2004ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் ராஜஸ்தானின் பிகானுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது மனைவி ஹேமமாலினி தற்போது அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கலையுலகம் கண்ட ஜாம்பவான்களில் தர்மேந்திராவும் நிச்சயம் ஒருவர்.

