கருப்பு| "பிளாக்பஸ்டர் ஆவதை விட.. படம் நல்லாருக்குனு சொன்னா போதும்.." - ஆர் ஜே பாலாஜி
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ மே 14 வெளியீட்டை முன்னிட்டு, ஹிட் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லையென அவர் விளக்குகிறார். ப்ளாக்பஸ்டர் ஆசையை விட, தியேட்டரில் பார்ப்பவர்கள் ரசித்து ‘சூப்பர்’ என்று சொல்லும் படமாக இருக்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்கிறார். தயாரிப்பாளர் படம் பார்த்த பின் நிம்மதியாக தூங்கினேன் என்ற பாராட்டும் அவருக்கு மகிழ்ச்சி அளித்ததாக கூறுகிறார்.
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பல பேட்டிகளை அளித்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சூர்யாவுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்ததா என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஆர் ஜே பாலாஜி "சூர்யா சாருக்கு இந்தப் படம் ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல் தான் எனக்கும். இதன் கடைசி ரிசல்ட் எனக்கு தெரியாது. ஆனால் தியேட்டரில் பார்க்கும் எல்லோரும் ரசித்து பார்த்து, படம் சூப்பராக இருந்தது என சொல்லும் ஒரு படத்தை எழுத நினைத்தேன். சூர்யா சார் இதில் நடிக்க ஓகே சொன்ன பிறகு என்னுடைய எழுத்தாளர்கள் ராகுல் - அஷ்வினிடம் சில விஷயங்களை திருத்தி எழுத சொன்னேன்.
அவருக்கு ஏற்றது போல சில விஷயங்களை மாற்றினோம், சேர்த்தோம். உதாரணத்துக்கு டீசரில் வாட்டர்மெலன் சாப்பிட்டும் காட்சி வரும். அது கஜினி படத்தில் அவர் செய்ததை நினைவு கூறும் வகையில் இருக்கும். இப்படி கதைக்குள் இருக்கும் தருணங்கள் எதை எல்லாம் இன்னும் மெருகேற்றலாம் என பார்த்தோம். இப்படி அவர் செய்தால் எதுவெல்லாம் ரசிக்கும் வகையில் இருக்கும் என பல விஷயங்களை சேர்த்தோம். இந்தப் படத்தை ஓட வைத்துவிட வேண்டும், ப்ளாக்பஸ்டர் ஆக்க வேண்டும் என்ற அழுத்தம் எல்லாம் இல்லை. எனக்கு முதலில் எங்களுக்கு பிடிக்க வேண்டும். ஆடியன்ஸுக்கு பிடிக்க வேண்டும். எங்கள் தயாரிப்பாளர் படத்தை பார்த்துவிட்டு, ரொம்ப நாள் கழித்து நிம்மதியாக தூங்கினேன் என்று சொன்னார், அது எனக்கு சந்தோஷமாக இருந்தது" என்றார்.

