Akhil Sathyan
Akhil SathyanSarvam Maya

மலையாளம் சினிமாவில் OTTஐ புறக்கணிக்க துவங்கியுள்ளோம்..! - இயக்குநர் அகில் சத்யன் | Akhil Sathyan

சமீபத்தில் வெளியான என்னுடைய இரண்டாவது படம் `Sarvam Maya' இன்னும் ஓடிடிக்கு விற்கவில்லை. வேறு எங்கிருந்தும் பணம் வராது, தியேட்டரில் இருந்து மட்டுமே பணம் வரும் என்ற அச்சுறுத்தலான இந்த சூழல் எங்களை விழிப்புணர்வு அடையச் செய்துள்ளது.
Published on

ச்தியேட்டர் - OTT இடையே எப்போதும் ஒரு மோதல் இருந்து வந்துள்ளது. OTT வியாபாரத்தை மனதில் வைத்து பலரும் சம்பளத்தை உயர்த்தியதால் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல் உருவானது துவங்கி, OTT வியாபாரம் முடியாததால் பெரிய ஹீரோக்களின் படங்களே ரிலீஸ் தேதியை முடிவு செய்யாதது வரை பல பிரச்சனைகள் இந்திய சினிமாவில் வெடிக்கத் துவங்கி இருக்கின்றன. இப்போது இதன் விளைவாக மலையாள சினிமா OTT வியாபாரத்தையே புறக்கணிக்கத் துவங்கி உள்ளது. சமீபத்தில் யூட்யூப் சேனலில் நடந்த மலையாள இயக்குநர்களின் உரையாடலின் போது OTT வியாபாரம் பற்றி பேச்சு வர அதைப் பற்றி விரிவாக பேசினார்கள்.

மலையாள சினிமா இயக்குநர் சத்யன் அந்திக்காடு மகனும் `Pachuvum Athbutha Vilakkum', `Sarvam Maya' போன்ற படங்களின் இயக்குநருமான அகில் சத்யன் பேசிய போது "மலையாளம் சினிமாவில் இப்போது OTT வியாபாரம் என்பது இல்லை. அந்த காலம் இப்போது முடிந்துவிட்டது. படம் நன்றாக இருந்தால் வந்து வாங்குவார்கள், வெளியீட்டுக்கு முன்பான வியாபாரம் இப்போது இல்லை. அது மிகச்சிறந்த விஷயம். ஏனென்றால் எல்லோரும் இனி தியேட்டரில் வெற்றி இல்லை என்றால் காலி என்ற நிலையை உணர்ந்துவிட்டார்கள். 90களில் இருந்த நிலைக்கு சினிமா இப்போது மீண்டும் வந்துவிட்டது. யாரிடம் பணம் உள்ளதோ, அவர்கள் மிக கவனமாக படம் எடுக்க வேண்டும்.

Sarvam Maya
Sarvam Maya

என்னுடைய முதல் படம் `Pachuvum Athbutha Vilakkum' படம் வெளியாகும் முன்பே OTT வியாபாரம் முடிந்தது. அது ஃபஹத் நடித்த படம், OTT வளரத் துவங்கிய காலம். நான் படத்தின் கதையை சுருக்கமாக மட்டுமே Prime குழுவிடம் கூறினேன். அவர்கள் படத்தை வாங்கிக் கொண்டார்கள். இப்போது அந்த நிலை இல்லை, சமீபத்தில் வெளியான என்னுடைய இரண்டாவது படம் `Sarvam Maya' இன்னும் ஓடிடிக்கு விற்கவில்லை. தியேட்டரில் மட்டும் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே வேறு எங்கிருந்தும் பணம் வராது, தியேட்டரில் இருந்து மட்டுமே பணம் வரும் என்ற அச்சுறுத்தலான இந்த சூழல் எங்களை விழிப்புணர்வு அடையச் செய்துள்ளது. இதே நிலைதான் படத்தின் ஆடியோ ரைட்ஸுக்கும். படத்தின் வெளியீடு வரும் வரை யாருமே வந்து கேட்கவில்லை, கடைசி நிமிடத்தில் வந்து கம்மியான விலைக்கு கேட்டார்கள், எனக்கு அந்தப் பணமே வேண்டாம் என முடிவு செய்து மறுத்துவிட்டேன். இப்போது அனைத்து உரிமையும் எனக்கே சொந்தம். மேலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் போது காட்சிகள் அதிகரிக்கும். எனவே 100 நாட்கள் ஓடி கிடைக்கும் வருமானம் 4 வாரங்களில் கிடைக்கும்" என்றார்

தொடர்ந்து பேசிய கௌதம் மேனன் "90களில் சாட்டிலைட் சேனல்களின் ஆதிக்கம் தான் இருந்தது. 8 நடிகர்களின் பெயரை எழுதி வைத்திருப்பார்கள். அவர்களின் படங்களை மட்டும் தான் வாங்குவார்கள். இப்போது OTTயிலும் அதே நிலைமைதான். டாப் 5 நடிகர்களின் படங்களை தான் வாங்குவோம் என்கிறார்கள்" எனப் பேசினார்.

GVM, Chithambaram
GVM, Chithambaram
Akhil Sathyan
உலகின் 100 சிறந்த படங்களில் ராஜமௌலியின் RRR | S S Rajamouli | Rotten Tomatoes

Manjummel Boys படம் மூலம் கவனம் ஈர்த்த சிதம்பரம் பேசும்போது "பட வெளியீட்டுக்கு முன்பே OTTக்கு படத்தை விற்பதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. படம் வெளியாகி 28 முதல் 45 நாட்களில் OTTயில் வெளியிடுவோம் என்ற நிபந்தனையோடு வருகிறார்கள். இது தியேட்டரில் படத்தின் ஓட்டத்தை பாதிக்கும். நல்ல வேலையாக என் முதல் இரு படங்களை (Jan.E.Man, Manjummel Boys) வெளியீட்டுக்கு முன்பு OTT வாங்கவில்லை. எனவே அவை இரண்டும் 100 நாட்கள் திரையரங்கில் ஓடியது" என்றார். மலையாள சினிமா துவங்கியுள்ள OTT புறக்கணிப்பு தீவிரமாகி மற்ற மொழிகளுக்கும் பரவி சினிமா மீண்டும் ஆரோக்யமான நிலைக்கு திரும்புமா என்பதே திரைத்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com