வடசென்னை யுனிவர்ஸ்-ல் அரசனாக சிம்பு... ஷுட்டிங் எப்போது? | Arasan | Simbu | Vetrimaaran
தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி இருக்கிறது வெற்றிமாறன் - சிம்பு இணையும் படம். இப்படத்தின் தலைப்பு `அரசன்' என அறிவிக்கப்பட்டுள்ளது. தாணு தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.
`விடுதலை 2'வுக்கு பிறகு தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் `வாடிவாசல்' படத்தை வெற்றி இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என அறிவித்தார் வெற்றிமாறன். இது வட சென்னை யுனிவர்ஸில் நடக்கும் கதையாக உருவாக இருக்கிறது என்பதும் அதிகாராப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சரி இதில் சிம்பு பாத்திரம் என்னவாக இருக்கும்? இதை சொல்வதற்கு ஒரு பிளாஷ்பேக்கை சொல்ல வேண்டும்.
வெற்றிமாறன் தனது முதல் படத்திற்கான கதை உருவாக்க சமயத்தில் நண்பர் ஒருவர் மூலம் பைக் திருட்டு சம்பந்தமான விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்ள ஒருவரை சந்திக்க சென்றிருக்கிறார். இந்த சந்திப்புதான் `வட சென்னை' படத்தின் துவக்கப்புள்ளி. பைக் திருட்டு பற்றி எல்லாம் வேறு நபர்களுக்குத்தான் தெரியும்; ஆனால், எனக்கு தெரிந்த வேறு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன் என, அண்டர்வேர்ல்டு சம்பந்தமான உண்மை சம்பவங்களையும் வெவ்வேறு குழுக்களையும் பற்றி கூறியிருக்கிறார் அந்த நபர். பேச்சு சுவாரஸ்யத்தில் பெயர்கள், சம்பவங்கள் மறந்துவிடக் கூடும் என்பதற்காக இதை ஒரு கதையாக 80 பக்க நோட்டு ஒன்றில் எழுதி வெற்றிமாறனுக்கு கொடுத்திருக்கிறார்.
எனவே பைக் கதையை ஓரம் கட்டிவிட்டு இந்தக் கதையினை கையில் எடுத்திருக்கிறார் வெற்றி. அப்போது இந்தக் கதையை கேட்ட தனுஷ், செல்வராகவனும் வடசென்னை சார்ந்த ஒரு கதையை தான் `புதுப்பேட்டை'யில் எடுக்கிறார் எனக் கூறியிருக்கிறார். மேலும் இப்படம் 70களின் மையத்தில் இருந்து 2003 வரையிலான நிகழ்வுகளாக விரியும். அதற்கான பட்ஜெட் அப்போது கிடைக்காது என்பதால், மீண்டும் பைக் திருட்டு கதைக்கே சென்றுவிட்டார். அதுதான் பொல்லாதவன்.
இதற்குப் பிறகு இந்த வடசென்னை கதையை, சிம்பு உட்பட வெவ்வேறு நடிகர்களை வைத்து எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இறுதியில் தனுஷிடமே வந்து சேர்ந்தது. இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பதால், முதலில் எழுதிய வெர்ஷனில் இருந்து பல கிளைக் கதைகள் நீக்கப்பட்டு, தனுஷுக்கு ஏற்றவாறு கதை வடிவமைக்கப்பட்டது. அப்படி நீக்கப்பட்ட ஒரு முக்கியமான பகுதி தான் இந்த `அரசன்' படமாக உருவாகிறது என சொல்லப்படுகிறது. இது ஒரே யுனிவர்ஸ் என்பதை உணர்த்தும் விதமாக, வடசென்னை ஸ்டைலிலேயே, அரசன் படத்தின் எழுத்துகளும் வடிவமைக்கப்பட்டிருப்பதை கவனிக்க முடியும்.
இந்தப் படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் திரையரங்கிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக ப்ரோமோ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பிறந்தநாளான அக்டோபர் 16ம் தேதி வெளியாகும் என்கிறார்கள். ஹீரோயினாக நடிக்க சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வடசென்னை படத்தின் கதாபாத்திரங்கள் சிலவும் இப்படத்தில் வர வாய்ப்பிருப்பதாக தகவல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ம் தேதி துவங்குகிறது என சொல்லப்படுகிறது. எப்படி இருக்கிறது எந்த வடசென்னை சினிமேட்டிக் யுனிவர்ஸ் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.