"இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக மனுஷி படத்தை..." - வெற்றிமாறன் பகிர்ந்த தகவல் | Manushi
ஆண்ட்ரியா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் கம்பெனி தயாரித்துள்ள படம் `மனுஷி'. இப்படம் சென்சாரில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக வெளியிடாமலே இருக்கிறது. மேலும் இந்தப் படத்தை வெளியே கொண்டு வர எதிர்கொண்ட பிரச்சனைகளின் காரணமாக இனிமேல் படத்தயாரிப்பு வேண்டாம் என முடிவு செய்து, அதனை `பேட் கேர்ள்' பட மேடையில் அறிவித்தார். அதன்படி கிராஸ் ரூட் கம்பெனி தயாரிப்பில் வெளியாகும் கடைசி படம் `மனுஷி' தான்.
வெற்றிமாறனின் வழிகாட்டுதலில் உருவாகியுள்ள படம் `மாஸ்க்'. இப்படத்தில் கவின், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். இது வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் விளம்பர பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் பேசிய போது `மனுஷி' படம் தொடர்பான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசிய போது "முதலில் சென்சார் சென்று பின்பு நிராகரிக்கப்பட்டது. இருமுறை revising committee சென்று அங்கும் நிராகரிக்கப்பட்டது.
பின்பு நீதிமன்றம் சென்றோம். இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக என நினைக்கிறேன், ஒரு உயர்நீமன்ற நீதிபதியே revising committee உடன் இணைந்து படத்தை பார்த்தார். பின்பு அவருடைய பரிந்துரைகளை கொடுத்தார். Revising committee 32 இடங்களில் கட் கொடுத்தது, ஆனால் அவர் அதில் 12 மட்டுமே அமல்படுத்தும் படி செய்தார். இப்போது படத்திற்கு U/A 16+ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. `மாஸ்க்' பட ரிலீஸ் வேலைகள் முடிந்ததும், அதன் வெளியீட்டு வேலைகளை துவங்க வேண்டும். சில மாதங்களில் படம் வெளியாகிவிடும்" என்றார். இது தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் `அரசன்' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24ம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

