உதயநிதி ஸ்டாலின், ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே வடிவேலு குரலில் வெளியான ‘ராசா கண்ணு’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. வடிவேலுவின் பின்னணி குரலில் தொடங்கும் ட்ரெய்லரில், ‘உண்மையை கேட்கக் கூடிய காதுகளை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்’ என்று அவர் சொல்வதில் இருந்து அநியாயத்துக்கு எதிராக போராடுவதை மையமாக சமூக பிரச்சனைகளை கையாளும் கதையை உருவாக்கியது போன்று தெரிகிறது. ஃபகத் ஃபாசில் அதிகார வர்க்கத்தில் இருப்பது போலவும், அவருக்கு எதிராக போராடும் கதாபாத்திரத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பது போன்று உள்ளது.
தனது முந்தையப் படங்களின் குறியீடுகளான நாய், குதிரை ஆகியவற்றை இந்தப் படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் பயன்படுத்தியுள்ளார். அதேநேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிரட்டலாக உள்ளது. இந்தப் படம் வருகிற 29-ம் தேதி வெளியாகவுள்ளதாக படத்தின் ட்ரெய்லரின் இறுதியில் தெரிவித்துள்ளனர்.