“ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை கேட்டுக்கொண்டே ஆடு, மாடு மேய்த்தேன்” - மாமன்னன் விழாவில் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இயக்குநர் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜ்PT Desk

இந்தநிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் பேசுகையில், “சமூக நீதியை பேசுகிற படங்களை எடுத்து வணிக ரீதியா வெற்றி அடைவது தமிழ் சினிமாவில் மட்டும் தான், தமிழ் சினிமா மட்டும் தான். ‘மாமன்னன்’ படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தை வடிவேலு அவர்கள் செய்துள்ளார். இப்படி ஒரு சீரியஸ் ஆன பாத்திரத்தில் அவரை பார்க்க வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். தொடர்ந்து இப்படிப்பட்ட படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும். சமூக நீதிக்கான படத்தை இன்றும் நாம் எடுக்கிறோம். சமூக நீதிக்கு போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும், தமிழ்நாட்டில், தமிழ் சினிமாவில் மட்டும்தான். அதற்கு வடிவேலு இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், “இந்த மேடையை முக்கியமான மேடையாக பார்க்கிறேன். வாழ்க்கையின் வலியை உணர்ந்து படம் எடுப்பவர் மாரி செல்வராஜ். இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் நீண்ட நாள் வாழ்ந்து நம்மை இசையால் சந்தோஷப்படுத்த வேண்டும். வடிவேலு ஒரு ஜீனியஸ். அவருக்கு நிகர் அவரே. உதயநிதி ஸ்டாலின் சினிமாவை விட்டு போகக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன். உதய் வருடத்திற்கு ஒரு படமாவது பண்ண வேண்டும். உதயநிதி ‘மாமன்னன்’ போல படம் பண்ண வேண்டும், சைக்கோ போல அல்ல” என்று தெரிவித்தார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி ரொம்ப முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. மாமன்னன் கதையை நான் யோசிக்கும் போது இது படமாகுமா, ஆகாதா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போது இந்த இடத்தில் வந்து நிற்கிறது. இந்த படத்தில் ஒரு நிஜம் இருக்கிறது‌. உண்மை இருக்கிறது. என்னுடைய வயதை தாண்டி மதிப்பு கொடுத்து வேலை பார்த்து கொடுத்தார்கள். வடிவேலுவையும், ரகுமானையும் சேர்த்து விட்டேன் என்பதே எனக்கு சந்தோசமாக இருந்தது.

‘உதயநிதியிடம், உன் கதையை கூறினால் அவருக்கு பிடிக்காது’ என்று ரஞ்சித் என்னிடம் கூறினார். வடிவேலு, ஃபகத் இருவரும் கதையை ஓகே சொன்னதும், இந்த படத்தை எப்படியும் எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. என்னுடைய பணி என்பது மக்களோடு மக்களாக இருந்து வருவதை படமாக்க விருப்பப்படுவேன். எனக்கு இன்னும் உதயநிதி, வடிவேலு, ஃபகத், கீர்த்தி சுரேஷ் ஆதரவாக இருக்கிறார்கள். என்னை matured ஆக மாற்றியதில் இந்த 4 பேருக்கும் முக்கிய பங்கு உள்ளது. என்னுடைய சினிமா பார்வை பிரம்மாண்டமாக மாறியது.

‘உயிரே’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை தியேட்டரில் பார்த்த பின், அதன் பாடலை பாடிக் கொண்டே ஆடு, மாடு மேய்த்தேன். ‘மாமன்னன்’ படத்துக்காக அவரிடம் பேசுவதற்கு முன்பு பலமுறை பயிற்சி எடுத்து கொண்டேன். ரஹ்மானுடனான 10 நாட்கள், நிறைய கற்றுக் கொண்டேன். எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. ஒரு தயக்கத்துடனே படமெடுப்பேன்‌. ரஹ்மானுடன் பேசிய பின் எனக்குள் ஒரு நம்பிக்கை வந்தது. ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு கதாபாத்திரம் என்னுடைய அப்பாவுடையது. என் கண்ணீரை, எனது அவபாடுகளை, என்னுடைய வலியை அனைத்தையும் அவர் மொழியில் காட்டி உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

‘தேவர் மகன்’ பார்க்கும் போது எனக்கு வலி, வேதனைகள் ஏற்பட்டது. ஒரு சினிமா எப்படி புரட்டி போடுகிறது? எது சரி தவறு என தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்த நாள். என் அப்பாவுக்காக செய்த படம்தான் ‘மாமன்னன்’. நான் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்கள் எடுக்கும் போது ‘தேவர் மகன்’ பார்த்துவிட்டு தான் எடுத்தேன். அதில் வரும் வடிவேலுவின் இசக்கி கதாபாத்திரம் தான் ‘மாமன்னன்’. இசக்கி மாமன்னனாக மாறினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. என்னுடைய அரசியலை ஒப்பு கொண்டதற்கு நன்றி. ‘மாமன்னன்’ ஒரு நிஜத்தோட வன்முறை என்றுப் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன் மேடையில் பேசுகையில், “நான் இந்த படத்தை பார்த்துவிட்டேன். இதை வாழ்த்த வேண்டும் என்பதை விட இது வெற்றி பெற்றாக வேண்டும் என்பது ஆசை. இது மாரியின் குரல் என்று நினைப்பார்கள். இது பலரின் குரல். இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற தலைமுறையில் நாம் நிற்கிறோம். என்னை பொறுத்தவரை இது என்னுடைய அரசியலும்தான். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கு முக்கிய காரணம் நடிகர்கள் தேர்வு. வடிவேலு நடிப்பிலும் ‘மாமன்னன்’ ஆகி இருக்கிறார். ‘தேவர் மகன்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தையும் வடிவேலு தாங்கிப்பிடித்தார்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

எமோஷனல், கோபம் வரும் காட்சிகள் நிறைய இருக்கிறது. எதிர்தரப்புக்கு கூட சமமான நிலையை தருவதற்கு மாரி முயற்சி செய்கிறார். அவரிடம் ஒரு நியாயம் தென்படுகிறது. ரஹ்மானின் இசைக்கு 3 தலைமுறைகள் மயங்கி கொண்டிருக்கிறது. நான் இந்த விழாவை என் தோளில் தாங்குகிறேன். ‘மாமன்னன்’ படம் ரசிகர்களின் தரத்தை நமக்கு சொல்லும்.

இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், “மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடை கிடைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ‘பரியேறும் பெருமாள்’ படம் செய்யும் பொழுது ஒரு பயம் இருந்தது. நான் படம் இயக்கும்போது கூட பயம் இருந்தது கிடையாது. மாரி செல்வராஜ் விரும்பும் ஒரு கலையை எப்படியாது திரைக்கு கொண்டு வர வேண்டும் என ஆர்வம் இருந்தது. நான் படம் இயக்க வரும்பொழுது அம்பேத்கரை பற்றி பேசினால் மதுரை பற்றி எரியும் என கூறினர். ஆனால் மக்கள் அப்படிப்பட்ட படைப்பை கொண்டாடினர், அதனால் தான் இந்த இடத்தில் நான் நிக்கிறேன்.

‘மாமன்னன்’ கதையை கேட்டதும் மிகவும் சீரியஸ் ஆக இருந்தது, கொஞ்சம் ஏதாவது மாற்றி எழுது என்றேன். ஆனால் மாரி செல்வராஜ் சீரியஸ் Tone தான் சரியாக இருக்கும் என தெரிவித்தார். இந்த ‘மாமன்னன்’ படத்திலும் முக்கியமான ஒரு அரசியல் தான் பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் ஏ.ஆர்.ரஹ்மான் சேர்ந்து இருப்பது பெரிய விஷயம்” என்றார்.

கலைப்புலி எஸ் தாணு
கலைப்புலி எஸ் தாணுPT Desk

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், “கதையை சொல்லும் போதே கட்டி அணைத்து ‘நன்றாக வரும், உதயநிதி நடிப்பது மிக பெரிய சகாப்தம்’ என்றேன். உதயநிதி தமிழ்நாட்டின் நாளைய நம்பிக்கை நச்சத்திரம்” என்றுப் பேசினார்.

விழாவில் மேலும் போனிகபூர், இயக்குநர்கள் பாண்டிராஜ், ஹெச் வினோத், விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, நடிகர்கள் சூரி, விஜயகுமார், கவின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com