சாய் பல்லவிக்கு எதிராக தொடரும் ட்ரோல்ஸ்.. குரல் கொடுக்காத சினிமாத்துறை! | Ramayana | Sai Pallavi
சாய் பல்லவி சீதாவாக நடிப்பதை எதிர்த்து இணையத்தில் ட்ரோல்ஸ் அதிகரிக்க, முன்பு அவர் மத வன்முறைகள், மாடுப் பாதுகாப்பு தாக்குதல்கள் குறித்து கூறிய கருத்துகளும் மீண்டும் விவாதமாகியுள்ளன. இதனால் தேசிய விருதில் புறக்கணிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழ, தற்போது ராமாயணம் படத்திலும் அவருக்கு எதிராகவே குரல்கள் அதிகம், ஆனால் திரைத்துறையிலிருந்து அவருக்கு ஆதரவு குரல்கள் மிகக் குறைவாக உள்ளன.
இந்தியாவின் முக்கியமான இதிகாச கதை இராமாயணம். தொலைக்காட்சி தொடராக, படமாக என பல மொழிகளில் வெவ்வேறு வடிவங்களில் இந்தக் கதையை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இராமாயணம் திரைப்படமாக உருவாகி வருகிறது, அதுவும் இரு பாகங்களாக. ஆமீர்கானின் `டங்கள்' படம் மூலம் மிகவும் அறியப்பட்ட நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்குகிறார். ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யஷ், சூர்ப்பனகையாக ராகுல் ப்ரீத் சிங், அனுமனாக சன்னி தியோல் எனப் பலரும் நடிக்கிறார்கள். இந்தி தொலைக்காட்சி தொடராக வந்த இராமாயணத்தில் ராமராக நடித்த அருண் கோவில், இந்தப் படத்தில் மன்னர் தசரதராக நடித்துள்ளார். ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்து பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஸிம்மர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு ஜூலை 18ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூலை 30ம் தேதி பிரம்ம முகூர்த்தத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லரில் ராவணனாக நடித்திருந்த யஷ் பாத்திரத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதே சமயம் ராமருக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை எனவும், சீதா பாத்திரத்துக்கு சாய் பல்லவி பொருத்தமாக இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
ராம்நாத் சாகர் இயக்கத்தில் உருவான `ராமாயண்' தொடரில் சீதா பாத்திரத்தில் நடித்த தீபிகா சிக்லியா கூறிய கருத்தும் இந்த சர்ச்சைக்கு வலு சேர்த்தது. அவர் நேரடியாக சாய் பல்லவி பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், ஒரு பேட்டியில் "துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில் சீதை கண்கள் எப்படி இருக்கும், உயரம் என்ன, கேசம், நிறம் என்ன என்பதெல்லாம் இருக்கும். ஆனால் சீதாவுக்கு சுருள் முடி இருந்ததாக ராமாயணத்தில் இல்லை" எனக் கூறி இருந்தார்.
அதே வேளையில் இணையத்திலும் பலரும் சாய் பல்லவி சீதாவாக நடித்திருப்பதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன் சாய் பல்லவி தெலுங்கில் நடித்திருந்த Virata Parvam பட வெளியீட்டு சமயத்தில் அளித்த பேட்டியில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராகவும், மாடுகளை பாதுகாப்பது என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களுக்கு எதிராகவும் பேசி இருந்தார். அதற்கு கடும் எதிர்வினைகள் எழுந்தன. இதன் விளைவாக தான் சமீபத்தில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட போது `அமரன்' படத்துக்காக சாய் பல்லவிக்கு விருது கிடைக்கவில்லை எனவும் சொல்லப்பட்டது. அந்த பிரச்சனை அடங்குவதற்குள் மீண்டும் சாய் பல்லவியின் மீது இந்த இணைய வழி கிண்டல்கள் பெருகியுள்ளது. இப்படி எதிர்வினைகள் இருக்கும் போது, சாய் பல்லவிக்கு ஆதரவாக சில குரல்கள் இருக்கத்தான் செய்கின்றன. படம் இந்தாண்டு தீபாவளிக்கு தான் வருகிறது, வெறும் 4 நிமிட ட்ரெய்லர் பார்த்து கருத்து சொல்வது நியாயம் கிடையாது என்றும் குரல்கள் எழுந்துள்ளது. ஆனாலும் பெரிய அளவில் நடக்கும் ட்ரோல்ஸ் மத்தியில், அவருக்கான ஆதரவு பெரிய அளவில் இல்லை. திரைத்துறையில் இருந்து கூட அவருக்கான ஆதரவு குரல் எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

