”இதுதான் இந்தியாவின் முதல் Motocross படம்!” - ஷர்வானந்த் பெருமிதம் | Sharwanand | Biker
ஷர்வானந்த், ராஜசேகர், அதுல குல்கர்னி, மாளவிகா நடிப்பில் அபிலாஷ் இயக்கியுள்ள தெலுங்குப் படம் `பைக்கர்'. இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஷர்வானந்த், "தமிழில் படம் வந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது, கடைசியாக ’கணம்’ வந்தது. எனக்கு ’எங்கேயும் எப்போதும்’ சமயத்திலிருந்து பெரிய ஆதரவைக் கொடுத்திருக்கிறீர்கள்.
தமிழ் மக்கள் மற்றும் தமிழ் சினிமா உடன் எப்போதும் எனக்கு ஒரு பிணைப்பு இருக்கும். எப்போதெல்லாம் தமிழில் படம் செய்கிறேனோ, அப்போது வித்தியாசமான படமாக இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்த முறை `பைக்கர்' படத்தோடு தமிழில் வருகிறேன். என்னுடைய பயணத்தில் நிறைய நல்ல படங்கள் செய்திருக்கிறேன். ஆனால், நான் பெருமையாகச் சொல்லுவேன், இதுதான் என்னுடைய சிறந்த படம். அதற்கு பல காரணங்கள் உண்டு. இதுதான் இந்தியாவின் முதல் Motocross படம். ஒவ்வோர் இந்தியரும் பெருமையாக இது எங்கள் இந்திய சினிமா என சொல்லிக் கொள்ளலாம். இது படமாக சுலபமான படம் கிடையாது.
இதில் ரேஸ் காட்சிகளை இந்தோனேஷியாவில் படமாக்கினோம். அதில் நிறைய விபத்துகளும் நடந்தன. இதை எடுக்கவோ, நடிக்கவோ அது ஒன்றும் சுலபமான விளையாட்டு கிடையாது. ’பைக்கர்’ படம் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை என்றே சொல்வேன். இந்தக் கதையை அபிலாஷ் சொன்னபோது இரு வேறு தோற்றங்கள் இருப்பதாக சொன்னார்.
இந்தப் படத்துக்காக 22 கிலோ எடை குறைத்தேன். அதற்காக ஆறுமாதம் படப்பிடிப்பை நிறுத்தி எடை குறைத்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கினோம். இந்தப் படம் அதன் தொழிநுட்பத்துக்காக பேசப்படக் கூடிய படமாக இருக்கும்" என்றார்.

