"இந்தப் படம் எனது 40 வருடக் கனவு!" - Singeetham Srinivasa Rao | Sing Geetham
இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். தனது 94ஆவது வயதில் அவர் இயக்கி வெளியிட உள்ள தெலுங்குப் படம் 'சிங் கீதம்'. வசனமே இல்லாமல், பாடல்கள் மூலமே உரையாடல் இடம்பெற்றிருக்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ள முதல் இந்திய படம் இது. இப்படம் ஜூன் 11ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் "அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது.
ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவீஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஓர் உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தைவிட என்னை அதிகமாக நேசித்தார். அவர், இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடனும் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும்.
தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர, வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாக் அஸ்வின் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர், என்னை ஒரு தந்தையைப்போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்" என்றார்.

