`தெறி' ரீ ரிலீஸை தள்ளிவைத்த தாணு, பின்னணி இதுதான்! | Theri | Vijay
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' ஜனவரி 9 வெளியாகவிருந்த நிலையில் சென்சார் சிக்கலால் வெளிவராமல் தள்ளிப்போனது. எனவே அதை சமன்செய்ய விஜய் நடித்த `தெறி' படத்தை ரீ-ரிலீஸ் செய்வதாக அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததால், அந்த வெளியீடு ஜனவரி 23க்கு தள்ளிவைக்கப்பட்டது. அதே நாளில் அஜித் நடித்த `மங்காத்தா' படமும் ரீ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே ரீ-ரிலீஸில் கூட விஜய் - அஜித் படங்கள் ஒரேநாளில் மோதப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த சூழலில் ஜனவரி 23ம் தேதி வெளியாக உள்ள `திரௌபதி 2' படத்தின் இயக்குநர் மோகன் ஜி நேற்று சமூக வலைதளத்தில் "கலைப்புலி தாணு சார், எங்களைப் போன்ற படக்குழுவிற்கு ஆதரவளித்து, ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் தளபதியின் தெறி படத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஐயா, புதிய தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு நீங்கள் நிறைய நலத்திட்டங்களைச் செய்தீர்கள். எனவே எங்கள் திரௌபதி 2 படத்தை பிரதான திரைகளில் வெளியிட ஆதரவளித்து எங்களுக்கு உதவுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இதனை கருத்தில் கொண்டு பதில் கூறிய தாணு "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு. அந்த நோக்கத்தை முன்னிட்டு "தெறி" திரைப்படத்தின் வெளியீட்டின் முடிவு நாளை அறிவிக்கப்படும். நன்றி" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இயக்குநர் மோகன் ஜி இன்று தாணு அலுவலகத்துக்கு சென்று, சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் தாணு தனது சமூக வலைதளத்தில் "திரௌபதி 2 மற்றும் Hotspot 2 திரைப்படங்களின் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று ,வளரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் `தெறி' திரைப்பட வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது" என்று பதிவிட்டார். ஒருபுறம் விஜய் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் என்றாலும், சின்ன படங்களுக்கு ஆதரவாக படத்தை தள்ளி வைத்ததற்கு பாராட்டுகளும் பெற்று வருகிறார் தாணு.

