"3 ஆண்டுகளாக Revenue Share பற்றி முடிவெடுக்கவில்லை.." தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் | TFPC | SIAA
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFPC) பொதுக்குழு கூட்டம் ஏப்ரல் 26ஆம் நடைபெற்றது. இதில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் Revenue Share முறையை ஏற்றுக்கொள்ள வேண்டும், எட்டு வாரங்களுக்குப் பிறகு OTT ரிலீஸ் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இதற்காக அடையாள வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு நேற்று மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் (SIAA) சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்துகிறார்கள் எனவும், வேலை நிறுத்தத்தைக் கைவிடவும் கூறி இருந்தது. இப்போது நடிகர் சங்கத்தின் கடிதத்திற்குப் பதில் அளித்து கடிதம் வெளியிட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். அதில், "தங்களது 27.04.2026 கிடைக்கப் தேதியிட்ட மின்னஞ்சல் பெற்றோம். மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதாரமற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கிறது என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டுள்ளீர்கள். அந்த விஷயம் குறித்து தங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.
தமிழ்த் திரையுலகின் நலன் கருதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியோர் இணைந்து திரைத்துறை மறுசீரமைப்பு என்று கடந்த 2024-ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் துவங்கினோம். அதில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உள்ள முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பள விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். பொதுவான விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டது. அவ்வகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மறுசீரமைப்பு கோரிக்கைகள் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 18.08.2024 அன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் 11-வது பத்தியில் தெளிவாக, முன்ணனி நடிகர்கள் மற்ற மாநிலங்களை போலவே Revenue Sharing முறையில் நடிக்க வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். மேலும், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலே தங்களுக்குத் தெரிவித்து வருகிறோம். அதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது, செயற்குழுவில் கலந்து நடிகர்களுடன் ஒரு கலந்துரையாடல் மீட்டிங் நடத்தி அதன் பின்னர் நாங்கள் முறையாக தெரிவிக்கின்றோம் என்று நடிகர் சங்கத் தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் கூறினார்கள்.
அதன் பின்னர், கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சில நடிகர்களின் பிரச்னைகள் குறித்து நமது இரு அமைப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தை சம்பந்தமாக தனுஷ் மற்றும் சில நடிகர்களின் பிரச்னைகள் இன்னும் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அப்படி பேச்சுவார்த்தை நடக்கும்போதுகூட Revenue Sharing பற்றி கூறினோம் அப்பொழுதும் தங்களது சங்க நிர்வாகிகள் முடிவெடுக்க முடியாது அதனால் நாங்கள் முன்ணனி நடிகர்களை அழைத்துப் பேசி முடிவெடுத்து கூறுகிறோம் என்று சொன்னீர்கள். அதன் பின்னர் ஒரு வருடம் தங்களிடம் இருந்து எந்தவிதமான பநிலும் வராமல் இருந்ததாலும், தொடர்ந்து எங்களது சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தினை ஏற்க மறுத்து வருவதாலும், கடந்த 09.11.2025 அன்று நடைபெற்ற எங்களது பொதுக்குழுவில் மேற்படி நடிகர்கள் Revenue Sharing முறையில் நடிக்க வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி தங்களுக்கு நேரடியாகவும், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாக அனைத்து திரைத்துறையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறாக 2023-ஆம் வருடம் முதல் 2025-ஆம் வருடம் வரை முன்ணனி நடிகர்கள் Revenue Sharing முறையில் நடிக்க வரவேண்டும் என்று தெரியப்படுத்தியும், தென்னிந்திய நடிகர் சங்கம் எந்தவிதமான முடிவும் அறிவிக்காமல் இருந்து வருகிறது என்பதை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தும் நோக்கில் தற்போது புதியதாக பதவியேற்ற நிர்வாகம் நடத்திய பொதுக்குழுவிலும் Revenue Sharing முறை குறித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
இதனை நடிகர் சங்கத்திற்கு தெரியப்படுத்தவில்லை என்று கூறுவது எங்களுக்கு மிகவும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் நமது இரு அமைப்பும் பேச்சுவார்த்தை நடத்த முன்னெடுக்கும்போது வாய்மொழியாக எங்களது தரப்பிலிருந்து இந்த விஷயத்தினை நடிகர் சங்கத் தலைவர், துணைத்தலைவர்கள். பொருளாளர் ஆகியோருக்கு தெரியப் படுத்தியுள்ளோம். ஆனால் தாங்கள் ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பாக எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளது ஏற்புடையதல்ல என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அவ்வகையில், கடந்த மூன்று வருட காலமாக நடிகர்கள் Revenue Sharing முறையில், தாங்கள் எந்தவிதமான முடிவும் எடுக்காத காரணத்தினாலும், எங்களது ஒத்துழைக்காத காரணத்தினாலும், பரிந்துரைக்கு தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் தெரிந்திருந்தும் நாங்கள் அடையாள வேலைநிறுத்தம் என்று முடிவெடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாங்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரும் பட்சத்தில், எங்களது பொதுக்குழுவின் தீர்மானமான அடையாள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்யலாம் என்றும், அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு வராமல் புறக்கணிக்கும் பட்சத்தில் எங்களது அடையாள வேலைநிறுத்தம் என்பது தொடரும் என்பதை தங்களுக்கு இந்த கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

