"இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிய சினிமாவில்.." - `ஹபீபி' குறித்து அமீர் பெருமிதம் | Ameer
`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது கஸ்தூரி ராஜா நடிப்பில் `ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மே 28ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய இயக்குநர் அமீர், "இது வழக்கமான திரைப்பட அறிமுக விழாவோ, இசை வெளியீட்டு விழாவோ அல்ல. உங்கள் எல்லோருக்கும் இந்த விழா என்ன உணர்வைக் கொடுக்கிறது எனத் தெரியவில்லை. எனக்குப் புதுவகையான உணர்வைக் கொடுக்கிறது. இஸ்லாமிய சமூகத்தில் திரைப்படங்கள் என்பதை தங்கள் வாழ்வியலில் இருந்து தூரமாக வைத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படத்தை இங்கு நிறுத்தி இருப்பதைத் தாண்டி, அந்த விழாவில் அந்தச் சமூகத்தை சார்ந்த நிறைய பேர் அமர்ந்திருப்பது ஒரு விஷயம். அதைத்தான் லீனா சொன்னபோது, ’இந்த இடத்திற்கு வர 100 வருடம் ஆகி இருக்கிறது’ என்று சொன்னார்.
’ஹபீபி’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் காதல், அன்பு, நேசம் என்பதெல்லாம் இருக்கிறது. இப்படி ஒரு திரைப்படத்தை எடுப்பதென்றால், அந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் எடுக்க முடியும். இதற்கு முன்னால் இஸ்லாமிய பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமானது சேரன் இயக்கிய `பொக்கிஷம்'. நாகூர் என்ற ஊரின் வாழ்வியலை அப்படியே பிரதிபலித்திருப்பார். இப்போது முதல்முறையாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் அடையாளமாக, ’இங்கிருந்து இனி துவங்குங்கள்’ என்று சொல்லி மீரா கதிரவன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
இதை ஏன் நான் அழுத்தமாகச் சொல்கிறேன் என்றால், இங்கு பேசிய அனைவரும் இது இஸ்லாமிய பின்னணி கொண்ட படம் எனச் சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்ச் சமூகத்தில் சொல்ல மறந்த ஒரு சமூகத்தின் கதை இது. தமிழர்கள்தானே அவர்கள். தமிழர்களில் இருந்து இஸ்லாமியர்களைப் பிரித்து வைத்திருப்பது ஏற்புடையதாக இல்லை. நூறு வருட சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பு எப்படி இருந்திருக்கிறது?
ஆரம்ப காலகட்டத்தில் சாம்பிராணி போடுபவராக, கறிக்கடையில் இருப்பவராக, துபாயிலிருந்து வரும் ஷேக் ஆக வருவார்கள். 90களுக்குப் பிறகு இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றால் தீவிரவாதிகள். அதில் நிறைய நடிகர்கள், இயக்குநர்களின் பங்களிப்பு தொடர்ச்சியாக இருந்தது. அது எதுவும் இல்லை, நெசவாளர்கள் என ஒரு முகத்தை காட்டி இருக்கிறார்கள் இந்தப் படத்தில் " என்றார்.

