`உயிருள்ள வரை உஷா' கதையை ரஜினிக்கு சொன்னப்போ... - டி.ராஜேந்தர் | T Rajendar | Rajinikanth
இயக்குநர் கே பாக்யராஜின் 50 வருட திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த விழாவில், நடிகர் டி.ராஜேந்தரும் கலந்துகொண்டு பேசினார். அந்த நிகழ்வில் ரஜினி பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியபோது, "நான் தரை டிக்கெட்டில் உட்கார்ந்து திரையில் பார்த்து விசிலடித்து, கைதட்டி ரசித்த ஒரு நட்சத்திரம் சூப்பர் ஸ்டார். ஜீனி மட்டும்தான் இனிக்கும் என நினைக்காதீர்கள், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே இனிக்கும் ஒரு ஜீனி அது ரஜினி. வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த பின்னும்கூட தலைக்கனம் இல்லாத ஒரு நட்சத்திரத்தை நான் பார்த்ததில்லை. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், நான் சினிமாவில் பெரிய ஆளாவதற்கு முன்பே என்னுடைய `இரயில் பயணங்களில்' படத்தைப் பார்த்துப் பாராட்டினார்.
நான் `உயிருள்ள வரை உஷா' படம் எடுத்தேன். அதில் ரஜினியைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்தேன். அந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, ’அவர் நடக்கும்போது என்ன இசை வரும், தலையை கோதினால் என்ன இசை வரும்’ என இசையுடனே கதை சொன்னேன். அவருக்கு பாட்டு போட்டிருந்தேன் என்றால், நாட்டையே கலக்கி இருப்பேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு ’கூலி’ படத்தில் அனிருத் மூலம் மீண்டும் அமைந்தது. ஒரு சின்ன பிட் பாடல் பாடினேன். அந்த வாய்ப்பு தவறிப்போனது.
ஆனால், என்னால் அந்த இசை வெளியீட்டுக்கு போக முடியவில்லை. அப்படி வராத ஒருவரை பற்றி யாராவது பேசுவார்களா? அங்கும், ’மரியாதைக்குரிய டி ராஜேந்தர்’ என அவர் பேசினார். 50 வருடம் ஹீரோவாகவே நடிக்கிறார் என்பதெல்லாம் எங்கும் நடக்குமா? அதற்கு அவருக்கு இருக்கிறது ஜாதகம், இறைவன் செய்கிறார் அவருக்கு சாதகம். எனக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனபோது, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றேன். அப்போது என்னைப் பற்றி விசாரிக்க எனக்கு அழைத்துப் பேசியதோடு மட்டுமல்லாமல், என் மனைவிக்கும் அழைத்துப் பேசினார் லதா" என்றார்.

