Suriya's Karuppu first shows are cancelled
SuriyaKaruppu

`கருப்பு' முதல் காட்சிகள் ரத்து.. படம் வெளியாவதில் நீடிக்கும் சிக்கல்! | Karuppu | Suriya

இன்று காலை 9 மணிக்கு திரையிட வேண்டிய காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல தாமதங்கள் கடந்து ரிலீஸ் தேதியை எட்டி இருக்கும் `கருப்பு' படத்திற்கு கடைசி நேரத்தில் இப்படி ஒரு தடை வந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Published on

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று (மே 14) வெளியாக இருந்தது. ஆனால், சில பண நெருக்கடி காரணமாக வெளியாவதில் சிக்கல் உருவாகியுள்ளது. இப்படத்தைத் தயாரித்துள்ள ட்ரீம் வாரியார் நிறுவனம், சிலருக்கு பணம் கொடுக்க வேண்டி இருந்தது. எனவே ’கருப்பு’ பட வெளியீட்டுக்கு முன் அவற்றை கொடுத்தால்தான் படம் வெளியாகும் என்ற சூழல் உருவாக, அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது தயாரிப்பு நிறுவனம்.

ரிலீசுக்கு முன்பாக பணம் சேர வேண்டிய நபர்களுக்கான தீர்வுகளை தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது. ஆனாலும் நேற்று நள்ளிரவு வரை இந்தப் பேச்சு நீண்டிருக்கிறது. ஏறக்குறைய எல்லா பிரச்னைகளும் சரி செய்யப்பட்டாலும், ஜஸ்வந்த் பண்டாரி என்பவருக்கு தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்க வேண்டியதால் நெருக்கடி நீடித்தது.

Suriya's Karuppu first shows are cancelled
மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்! - ஷங்கர் | CM Vijay | Shankar

அதன் எதிரொலியாகதான் இன்று காலை 9 மணிக்கு திரையிட வேண்டிய காட்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல தாமதங்கள் கடந்து ரிலீஸ் தேதியை எட்டி இருக்கும் `கருப்பு' படத்திற்கு கடைசி நேரத்தில் இப்படி ஒரு தடை வந்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் படத்தின் இயக்குநர் நேற்று இரவு பதிவிட்டபோது, "அன்பான ரசிகர்களே, தற்போதைய நிலைமைக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. தயாரிப்பாளர்கள் தடைகளைச் சரிசெய்ய தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் எப்போதுமே தடைகள் இருந்திருக்கின்றன, ஆனால், எப்படியோ கடவுள் அதையெல்லாம் கடந்து வரச் செய்து, 32 மாதங்களுக்குப் பிறகு இதோ நாங்கள் இங்கே இருக்கிறோம். இந்த முறையும், அவர் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, முழுமையான நம்பிக்கை. கருப்பன் எல்லாத் தடையும் அடிச்சு உடைப்பான். #Karuppu நாளைக்கு காலைல செமயா release ஆகும்..!!! நம்பிக்கை வைங்க, நடக்கும்…!!!" என்று குறிப்பிட்டிருந்தார்.

நேற்று நள்ளிரவும் பிரச்னை தீராத நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "தவிர்க்க முடியாத காரணங்களால் ’கருப்பு’ திரைப்படத்தின் காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" எனப் பதிவிட்டார். சிக்கல்கள் தீர்ந்து இன்று பிற்பகலுக்கு மேலோ அல்லது நாளையோ படம் வெளியாகலாம் எனச் சொல்லப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com