`சிறை' போலீஸ் அமைப்பு பற்றிய கேள்விகளை உண்டாக்கும் - வெற்றிமாறன் | Vetrimaaran |
சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம்பிரபு, அக்ஷய்குமார், அனீஷிமா நடித்துள்ள `சிறை' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெற்றிமாறன் பேசிய போது "இந்த வருடம் ஒரு இயக்குநராக எனக்கு நல்ல வருடம். என் படம் வெளியாகவில்லை, ஆனால் என் உதவியாளர்கள் படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோரும் படத்தை பற்றி நிறைய பேசிவிட்டனர். எனவே நான் சுரேஷை பற்றி பேச விரும்புகிறேன். சுரேஷ் மிக சமநிலையான ஒரு நபர். எந்த சூழலையும் மிக நிதானமாக, அமைதியாக, அறத்துடன் கையாள்வார். எது சரியோ அதன் பக்கம் நிற்பார். தவறு செய்வது நானாக இருந்தாலும், அதை ஏற்றுக் கொள்ளும் நபர் அல்ல அவர். அது தவறு என்பதை அவர் சொல்லும் விதமும் தன்மையாக இருக்கும். மனிதர்களை கையாள்வதில் அவர் கைதேர்ந்தவர். பெருவாரியான முறை படம் முடியும் சமயத்தில் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் ஒரு சண்டை இருக்கும். ஆனால் லலித் சார் சுரேஷுக்கு ஒரு கார் பரிசாக தந்திருக்கிறார். எந்த வித அழுத்தத்தையும், மக்களையும் கையாள்வது அவரால் கையாள முடிந்தது தான் இதற்கு காரணம் என நினைக்கிறேன்.
முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம், நமக்கு நம் மீதே சந்தேகம் வருவது எனப் பல சிக்கல்கள் இருக்கும். எந்த குழப்பமும் இல்லாமல், தெளிவாக படம் எடுத்திருக்கிறார்கள். இரஞ்சித் பேசும் போது ஒரு காவல் நிலைய காட்சியை பற்றி கூறினார். அந்த காட்சியை முதலில் என்னிடம் கூறிய போது, இதை மட்டும் நீ எடுத்துவிட்டால் படம் பெரிய படமாக ஆகிவிடும் எனக் கூறினேன். படத்தில் அந்தக் காட்சியை பார்த்தேன், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது.
சுரேஷின் குணத்தை பற்றி கூட ஒரு சம்பவத்தை சொல்கிறேன். எங்களுடைய அலுவலகத்தில், பணியாற்றும் ஒரு பையனை ஒரு தகராறின் காரணமாக அந்த ஏரியா பசங்க அடித்துவிட்டார்கள். அந்தப் பையன் சுரேஷிடம் இது பற்றி கூறியிருக்கிறார். சுரேஷ் என்ன செய்திருக்க வேண்டும் என்றால், என்னிடம் வந்து சொல்ல வேண்டும். அப்படி என்னிடம் கூறினால் என்னுடைய ரியாக்ஷன் இரண்டு விதத்தில் இருக்கலாம். ஒன்று அந்த பையனிடம் ஒழுங்காக இருக்க மாட்டாயா என கூறுவேன். அப்போது நான் அவனுக்காக நிற்கவில்லையே என்ற சூழல் உருவாகும். இல்லை என்றால், யார் அந்த பசங்க எனக் கேட்டு நடவடிக்கை எடுக்கலாம். அப்படி செய்தால் 15 வருடமாக அந்த ஏரியாவில் இருக்கிறோம், அந்த இணக்கம் குழையலாம். இங்கு சுரேஷ் என்ன பொறுப்பை எடுத்துக் கொண்டார் என்றால், அலுவலகத்தில் வேலை செய்யும் பையனுக்கு தன்னை கைவிட்டுவிட்டார் என்ற உணர்வு வரக்கூடாது. அதே நேரம் நான் இதில் தலையிடவும் கூடாது. எனவே அந்த பையனை சுரேஷ் அழைத்து கொண்டு அந்த நான்கு பசங்களை சந்திக்க சென்றார். அவர்களிடம் போய் பேசி சுமூகமாக பிரச்சனையை தீர்த்து வைத்தார். இந்த விஷயம் அவர் சொல்லி எனக்கு தெரியாது. மற்றவர்கள் சொல்லி தெரிந்து கொண்டடேன். பிரச்சனைகளை தீர்க்கும் திறமை கொண்டவர் சுரேஷ்.
நான் சிறை பார்த்த போது படத்தில் என்ன குறைகள் இருக்கிறது என்றே பார்த்தேன். பிறகு படம் பார்த்த பலரும் எனக்கு அழைத்து படத்தை பாராட்டினார்கள். இரஞ்சித் கூட பேசினார். எனக்கு குறையாக பட்டத்தை அவரிடம் கூறுகையில், இல்லை அது நன்றாக தான் இருந்தது எனக் கூறினார். இன்றும் நிறைய பேர் பாராட்டும் போது தான், ஐயோ நாம் படத்தை சரியாக பார்க்கவில்லையோ, குறையை மட்டுமே தேடினோமோ என தோன்றியது. இந்தப் படம் நம் பொது புத்திக்குள் இருக்கும் விஷயங்களை கேள்விக்கு உட்படுத்துகிறது. படம் முடிகையில் போலீஸ் அமைப்பு பற்றி, இன்று இருக்கும் பெருவாரியான சிந்தனை முறை என பலவற்றை பற்றிய கேள்விகளை நமக்குள் உண்டாக்குகிறது. சுரேஷை எல்லோரும் ஒரு இயக்குநராக பாராட்டுவது பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது" என்றார்.

