`இந்தியன் 3'யா, `வேள்பாரி'யா... ஷங்கரின் முடிவு என்ன? | Shankar | Indian 3 | Velpari
ஷங்கர் தற்போது சு வெங்கடேசனின் 'வேள்பாரி' நாவலை படமாக்கும் பணிகளில் மூழ்கியுள்ளார். 'இந்தியன் 3' படத்தை முடிக்க லைகா நிறுவனம் 3 மாத கால அவகாசம் கேட்டுள்ளது. ஆனால், இந்த காலத்தில் முடிக்க முடியாவிட்டால், 'வேள்பாரி' முடிந்த பின்பு தான் 'இந்தியன் 3' வேலைகளை தொடர முடியும் என ஷங்கர் தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ல் வெளியான படம் `இந்தியன்'. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 2024ம் ஆண்டு வெளியானது. இப்படத்துக்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலும், படத்தின் இறுதியில் வந்த `இந்தியன் 3' பட ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் அந்தப் படத்தை நிறைவு செய்ய இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை துவங்கும் சூழல் இப்போதைக்கு எதுவும் தென்படவில்லை.
இப்போது ஷங்கருக்கு சு வெங்கடேசனின் `வேள்பாரி' நாவலை படமாக்கும் வேலைகளை துவங்க வேண்டிய சூழல், அதன் பணிகளில் பரபரப்பாக இருக்கிறார். ஆனால் இந்தப் படத்தை ஆரம்பித்ததும், `இந்தியன் 3' படத்தை முடிக்க வேண்டும் என லைகா நிறுவனம் வந்தால் என்ன செய்வது என்ற யோசனை வந்திருக்கிறது. உடனே லைகா தரப்பை தொடர்பு கொண்டு, வேள்பாரி படத்தை இயக்க போவதையும், ஒருவேளை `இந்தியன் 3' எடுக்க வேண்டும் என்றால் 3 மாதத்திற்குள் அதன் வேலைகளை முடிக்கும் படி தயாராக வாருங்கள் எனவும் சொல்லி இருக்கிறாராம்.
ஒருவேளை இந்த 3 மாதத்திற்குள் `இந்தியன் 3' வேலைகள் முடியவில்லை என்றால், அதன் பின்னர் என்னால் வர முடியாது. `வேள்பாரி'யை முடித்த பின்பு தான் வருவேன் எனத் தெளிவாக சொல்லிவிட்டாராம் ஷங்கர். இனிமேல் லைகா தான் முடிவெடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். ஷங்கர் `இந்தியன் 2' எடுத்த போது அது சில காரணங்களால் நின்று போக, பின்னர் ராம் சரண் நடித்த `கேம் சேஞ்சர்' படத்தை இயக்க சென்றார். ஒரு கட்டத்தில் `இந்தியன் 2', `கேம் சேஞ்சர்' இரு படங்களையும் அவர் ஒரே நேரத்தில் இயக்க வேண்டிய சூழல் உருவானது. அப்படியான நிலை மறுபடி வரக்கூடாது என இந்த முறை முன்பே சுதாரித்துவிட்டார் ஷங்கர்.

