`தலைவர் 173' படத்தை மறுக்க 'சங்கமித்ரா' காரணமா? - சுந்தர் சி சொன்ன பதில் | Sundar C
இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா நடிப்பில் `மூக்குத்தி அம்மன் 2' படத்தை முடித்துவிட்டு, விஷால், தமன்னா நடிப்பில் `புருஷன்' படத்தை இயக்கிவருகிறார். நேற்று அழகு நிலைய கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சுந்தர் சி.
அந்த நிகழ்வில் அவரிடம், ’இவர்களது பர்சனாலிட்டி மிகவும் பிடிக்கும்’ எனச் சொல்லச் சொன்னார் ஒரு நடிகர், ’ஒரு நடிகை பெயர் சொல்லுங்கள்’ எனக் கேட்கப்பட, "என்னுடைய ஆரம்ப காலங்களில் கார்த்திக் சாருடன் பணியாற்றி இருக்கிறேன். அவரது பர்சனாலிட்டி சிறப்பாக இருக்கும். என்ன அணிந்தாலும் அழகாக இருப்பது என்றால் ரஜினி சார் மட்டும்தான். அவர் ஸ்டைலானதை அணிய தேவை இல்லை. அவர் அணிவது எல்லாம் ஸ்டைலாகிவிடும். பெண்களில் சொல்வதென்றால், என் மனைவி பெயரை முதலில் சொல்வேன். பின்னர் ரம்பாவைச் சொல்லலாம். அவர் தன்னை மிகச் சிறப்பாக அழகுபடுத்திக் கொள்வார். அதன் பிறகு த்ரிஷா, அவரது காஸ்ட்யூம் சென்ஸ் அருமையாக இருக்கும். இப்போது நான் பணியாற்றும் நடிகைகளில் சொல்வதென்றால் தமன்னாவை சொல்லலாம்" என்றார்.
’’ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் பட வாய்ப்பை மறுக்க காரணம், உங்கள் கனவுப் படமான ’சங்கமித்ரா’வை இயக்குவதற்காகவா’’ என்ற கேள்வி வர, "அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எனக்கு அடுத்தடுத்து படங்களின் கமிட்மென்ட் இருக்கிறது என்பதுதான் ‘சங்கமித்ரா’ இப்போது பண்ண முடியாத காரணம்.
இப்போது இருக்கும் பணிகளை முடித்துவிட்டு ’சங்கமித்ரா’ துவங்க எப்படியும் இரண்டு வருடங்கள் ஆகிவிடும். இப்போது எனக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே இரண்டு வருடத்தை ஒரு படத்தில் செலவிடுவது இயலாத காரியம்." என்றார்.

