”அடிக்கடி Gamsahabnida என சொல்வேன், அதன் அர்த்தம்..” - ப்ரியங்கா மோகன் | Priyanka Mohan
ப்ரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள 'மேட் இன் கொரியா' படம் மார்ச் 12ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. ப்ரியங்கா, 'Gamsahabnida' என்ற கொரிய வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவதாகவும், அதற்கான அர்த்தம் என்ன எனவும் கூறினார். படப்பிடிப்பின் போது வானிலை மாற்றம் சவாலாக இருந்தது என அவர் பகிர்ந்தார்.
ப்ரியங்கா மோகன் நடிப்பில் ரா கார்த்திக் இயக்கியுள்ள படம் `மேட் இன் கொரியா'. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் மார்ச் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ப்ரியங்கா மோகன், இயக்குநர் ரா கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ப்ரியங்கா மோகனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இப்படத்தில் உள்ள செம்பா பாத்திரத்திற்கு இன்ஸ்ட்டா பயோ இருந்தால் எப்படி இருக்கும் எனக் கேட்கப்பட "Emily in Paris போல இது செம்பா இன் கொரியா, இதுதான் செம்பாவின் இன்ஸ்ட்டா பயோவாக இருக்கும்" என்றார். கொரியாவில் கற்றுக் கொண்டு, அடிக்கடி பயன்படுத்தும் கொரிய வார்த்தை எது எனக் கேட்கப்பட "Gamsahabnida என்ற கொரிய வார்த்தையை தான் இப்போது நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன். அதற்கு அர்த்தம் நன்றி. அங்கு உள்ள நடிகர்கள் அனைவரும் படப்பிடிப்பு முடிந்ததும், தலையை வணங்கி Gamsahabnida என சொல்லி தான் செட்டில் இருந்து கிளம்புவார்கள்." என்றார்.
இப்படப்பிடிப்பில் பெரிய சவால் என்றால் என்ன சொல்வீர்கள் என்றதும் "அங்கு இருந்த வானிலை தான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. அதுவும் கணிக்கவே முடியாததாக இருக்கும். ஒருநாள் காலையில் ஷுட் துவங்கும் போது நன்றாக இருந்தது, மதியம் மழை, மாலை Cherry blossom, இரவு பனி என ஒரே நாளில் நான்கு வானிலை மாறியது. அதற்கு ஏற்ப படம் பிடித்தது சவாலாக இருந்தது." என்றார் ப்ரியங்கா மோகன்.

