"100வது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார் ஆர்.பி. சௌத்ரி!" - ரஜினி பகிர்வு | Rajinikanth
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் ஜீவா, ரமேஷ் ஆகியோரின் தந்தை ஆர்.பி.சௌத்ரி (74) மே 5ம் தேதி மாலை ராஜஸ்தானில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பலியானார். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 100 திரைப்படங்களை தயாரித்துள்ளார். நேற்று அவரது உடல் சென்னைக்கு வந்து எடுத்து வரப்பட்டது, சூர்யா, தனுஷ், கார்த்தி, மம்மூட்டி, விஜய் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ரஜினிகாந்த் இன்று காலை அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது பேசியவர் "ஆர் பி சௌத்ரி அவர்களுடன் நான் படம் செய்ததில்லை. இருந்தாலும் அவர் என் நெருங்கிய நண்பர். நிறைய முறை சந்தித்து பேசி இருக்கிறோம். சமீபத்தில் ஒரு நான்கு மாதங்கள் முன்பு ஜெயிலர் 2 படப்பிடிப்பின் போது செட்டுக்கே வந்து சந்தித்தார். 99 படம் எடுத்துவிட்டேன், 100வது படத்தையும் எடுத்துவிட்டு நான் ஓய்வு பெற இருக்கிறேன். இந்த 100வது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். மூன்று கதைகள் கேட்டு வைத்திருக்கிறேன். நீங்கள் கேட்டுவிட்டு கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்றார். நானும் உறுதியாக நடிக்கிறேன் என சொல்லி இருந்தேன்.
ஆர் பி சௌத்ரி அவர்கள் எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கி இருக்கிறார். அந்த இயக்குநர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு ஒரு விழா எடுக்கலாம் என இருக்கிறோம் என சில மாதங்கள் முன்பு கே எஸ் ரவிக்குமார் கூறினார். மிகப்பெரிய மனிதர் எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கி, சினிமா துறையை காப்பாற்றியவர். பல பேருக்கு வேலை கொடுத்தவர். 99 படங்கள் எடுத்திருக்கிறார், எந்தப் படத்திலும் பிரச்னை வந்ததே இல்லை. ஒருவேளை வந்தால் கூட சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கே சென்று என்ன செய்யலாம் எனக் கேட்டு தீர்வை நோக்கி நகர்வார். அவர் வீட்டிலேயே காபி குடித்துவிட்டு செல்வார்" என்றார். இன்று மாலை கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

