ஜெயிலர் 2 தள்ளிப் போகிறதா? | Jailer 2 | Rajinikanth | Nelson Dilipkumar
முதலில் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்ட ‘ஜெயிலர் 2’ படம், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குத் தேவையான கூடுதல் நேரம் காரணமாக செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட முதல் சிங்கிள் கூட தாமதமாகலாம் என்ற குழப்பம் நிலவுகிறது. முதல் பாகம் வெற்றியால், இந்த பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி வந்த படம் `ஜெயிலர் 2'. இதில் ரஜினி உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றங்களில் சிவராஜ் குமார், மோகன்லால், வித்யா பாலன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி எனப் பலரும் நடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரல் 21ம் தேதியோடு நிறைவடைந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதலில் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் வேலைகள் முடிய கூடுதல் அவகாசம் வேண்டும் என்பதால், படத்தை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல்.
சில தினங்களுக்கு முன் ஜூன் மாதம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது என சொல்லப்பட்டது. அது வருமா? அல்லது அதுவும் தள்ளிப் போகுமா என்பது குறித்து எந்த உறுதியும் இல்லை. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடந்துவந்தது. முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் என்பதால் இந்த பாகத்தின் மேலும் பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. ஜெயிலர் 2வுக்கு பிறகு ரஜினி நடிக்கும் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியா அல்லது அஷ்வத் மாரிமுத்துவா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

