"அம்மா இறந்த செய்தி கேட்டும்.." - ராதிகா குறித்து நெகிழும் படக்குழு | Radhikaa
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் `விஸ்வநாத் & சன்ஸ்'. இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷனல் பேட்டி ஒன்றை அளித்துள்ள படக்குழு. அதில் நடிகை ராதிகா தன் அம்மா இறந்துபோன செய்தி கேட்ட பின்பும், படத்தின் முக்கியக் காட்சியை நடித்துக் கொடுத்தது குறித்து கூறியுள்ளனர். இயக்குநர் வெங்கி இதுகுறித்து கூறும்போது, "படத்தில் மிகவும் காமெடியான ஒரு காட்சியை எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் ராதிகா மேடத்தின் அம்மா இறந்து போய்விட்டார் என்ற செய்தி வருகிறது. உடனே ராதிகா மேடம் என்னிடம் `இந்தக் காட்சியை நடித்து முடித்தபின் போகட்டுமா' எனக் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை" என்றார்.
மமிதா பைஜூ கூறும்போது, "படப்பிடிப்பில் இருந்தபோது ராதிகா மேடம் தன் அம்மா எவ்வளவு முக்கியம் என்று பல விஷயங்கள் சொல்லி இருக்கிறார். அவர் தன் அம்மா பற்றி கூறும்போது, எனக்கும் என் அம்மாவுக்கும் இருக்கக்கூடிய பிணைப்பைப் போலவே இருக்கும். இந்தச் செய்தி வந்ததும் எனக்கு மனம் மிகவும் உடைந்துவிட்டது. அவர் மனதில் என்ன ஓடும் என எனக்குத் தெரியும். ஆனாலும், அவர் அந்த காமெடி காட்சியில் நடித்தார். அவர் கண்ணைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. ஆனால், அவர் அந்தக் காட்சியில் முழு ஈடுபாட்டோடு நடித்தார்" என்றார்.
நடிகர் சூர்யா கூறும்போது, "அம்மாவுக்கும், அவர் சார்ந்துள்ள கலைக்கும் கொடுக்கும் சம அளவு மரியாதை. அதுதான் அப்படி நடந்துகொள்ள வைத்திருக்கிறது. அவர் அடைந்திருக்கும் உயரத்திற்கும் சினிமாவுக்கும் அவர் கொடுக்கும் அன்பு மற்றும் மரியாதைதான் காரணம். " என்றார்
இதுகுறித்து நடிகை ராதிகா கூறும்போது, "அந்தக் காட்சியை 85 சதவீதம் எடுத்து முடித்துவிட்டோம். இன்னும் ஐந்து ஷாட்ஸ் மட்டுமே மீதம் இருந்தது. அதை முடித்தால் மொத்தக் காட்சியும் முடிந்துவிடும். ஒருவேளை, அதனை நடிக்காமல் போனால், மீண்டும் 2 மாதங்கள் கழித்துத்தான் எடுக்க முடியும். மறுபடி, இதேபோல ஓர் உணர்வை மீண்டும் கொண்டுவருவதும் நடக்காத காரியம். இன்னும் சொல்லப்போனால், என் அம்மா சொன்னதால்தான் நான் படப்பிடிப்புக்கே வந்தேன். அவர் மிகவும் சீரியஸ் கண்டிஷனில் இருந்தபோது அவரோடுதான் இருந்தேன். ஆனால், நீ கிளம்பி ஷூட்டிங் போ என அம்மாதான் சொன்னார்" என்றார்.

