"நல்லா இல்லை என்றாலும் சொல்லுங்கள்..." ஆர் ஜே பாலாஜி அளித்த விளக்கம்! | R J Balaji | Karuppu
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் Pre-Release நிகழ்வு நேற்று கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஆர் ஜே பாலாஜி இதற்கு முன் ஹைதராபாத்தில் பேசிய கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கம் அளித்தார்.
அவர் பேசிய போது "நான் இதுவரை இந்த படத்துக்கு ஹைப் கொடுத்து எதுவும் சொல்லவில்லை. ஹைதராபாத்தில் பேசும் போது, இது தியேட்டரில் கொண்டாடுபவர்களுக்கான படம், கூறு போடுபவர்களுக்கு அல்ல என கூறினேன். உடனே அந்த பேச்சை கூறு போட்டு அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வரும் போதே கையில் நோட் உடன் வராதீர்கள். கொண்டாட்ட மனநிலையில் வாருங்கள். படம் பார்த்துவிட்டு நல்லா இருந்தாலும் சொல்லுங்கள், நல்லா இல்லை என்றாலும் சொல்லுங்கள். ஒரு பொருள் சந்தைக்கு வந்த பின்னர் எல்லோரும் அதை பற்றி பேச வேண்டும், விமர்சிக்க வேண்டும்.
நானே விமர்சனம் செய்து தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். எல்லோரும் படம் பற்றி பேச வேண்டும். ஆனால் படத்தை ரசித்து பார்க்கும் மனநிலையோடு வாருங்கள். இது ஒரு கொண்டாட்டமான படம் என சொல்வதால் Mindless Entertainer என நினைக்காதீர்கள். இது Mindfull Entertainer, ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்துதான் என்னுடைய எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்கள். சரியான விஷயங்கள் சொல்லும், பெண்களை சரியாக கையாளும், பார்வையாளர்களை மதிக்கும் படமாக இருக்கும்." என்றார் ஆர்.ஜே.பாலாஜி.

