" 'தெறி' படத்துல வில்லனா நடிக்க வேண்டியது இவர்தான்.." - தாணு சொன்ன ரகசியம் | Theri | Vijay
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தாணு. இவர் தயாரிப்பில் விஜய் நடித்து அட்லீ இயக்கிய `தெறி' படம் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு பேட்டி அளித்த தாணு, `தெறி' பற்றி இதுவரை தெரியாத சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
`தெறி'யில் இயக்குநர் மகேந்திரனை நடிக்கவைத்தது பற்றி கேட்கப்பட, "அது முழுக்க முழுக்க அட்லீயின் முடிவுதான். ஆனால் அவர் முதலில் நடிக்க வைப்பதற்காக யோசித்து வைத்திருந்தது இயக்குநர் பாரதிராஜாவை. ஆனால் பாரதிராஜா `யோவ் என்னய்யா? என்ன போய் வில்லனால்லாம், நான் நடிக்கமாட்டேன்' என சொல்லிவிட்டார். அட்லீயுடைய தேர்வுகளில் இருந்தது இரண்டே பேர்தான். ஒன்று பாரதிராஜா, இன்னொன்று மகேந்திரன் சார். ஆனால், மகேந்திரன் சாருக்கு நாங்கள் பாரதிராஜா சாரிடம் கேட்டது தெரியாது. ஆனால் அட்லீ மட்டும் மகேந்திரன் சார் நடித்தால் நன்றாக இருக்கும் எனச் சொன்னார். அதன்பிறகு நான், மகேந்திரன் சாரிடம் போன் போட்டு பார்க்க வருவதாக சொல்லி, நேரில் சென்றுவிட்டேன்.
அவருக்கு என் மீது மிகுந்த பாசம். ’தையல்காரன்’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்தது அவர்தான். பின்னர் அவருடைய மகன் ஜான் இயக்கிய ’சச்சின்’ படத்தை தயாரித்தேன். இதெல்லாம் எங்களுக்குள் நல்ல நட்பை உருவாக்கியது. இந்த பழக்கத்தை மனதில் வைத்து `தெறி' படம் பற்றி கூறினேன். ’விஜய்க்கு சம்மதமா’ எனக் கேட்டார், ’அவருடைய சம்மதம் இல்லாமல் வர முடியுமா’ என்றேன்.
அதற்கு முன் இசையமைப்பாளர் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடிக்க மறுத்தவர், எனக்காக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அட்லீ இந்தப் படத்தின் கதையைச் சொல்லி முடித்தது. ’இது உங்கள் கேரியரிலேயே பெரிய ஹிட் படமாக இருக்கும்’ என்றார், அப்படித்தான் நடந்தது. இன்னும் சொல்லப்போனால், `துப்பாக்கி' படத்தைவிட `தெறி' பட வசூல் அதிகம். அந்த அளவு பெரிய ஹிட்டாக அமைந்தது" என்றார்.

