"விஸ்வரூபம் இயக்க முடியவில்லை என்ற வருத்தம்..." - செல்வராகவன் பகிர்ந்த ஏக்கம் | Selvaraghavan
கமல்ஹாசன் இயக்கி நடித்து இரு பாகங்களாக வெளியான படம் `விஸ்வரூபம்'. இப்படத்தை முதலில் இயக்குவதாக ஒப்பந்தமானது செல்வராகவன். பின்னர் கமலுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளாலும் மற்றும் அவருக்கு இருந்த மற்ற பட வேலைகள் காரணமாகவும் இதிலிருந்து விலகினார் செல்வராகவன். தற்போது தன் நடிப்பில் வெளியாகியுள்ள `மனிதன் தெய்வமாகலாம்' படம் தொடர்பாக பேட்டி அளித்து வருகிறார் செல்வராகவன். அதில் இந்தப் படத்தை எடுக்க முடியவில்லையே என கவலை அளிக்கும் படம் எது எனக் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன செல்வா "இதில் பல தடங்கல் எல்லாம் இல்லை, ஒரே தடங்கல் தான் இருக்கும். ஆனால் அதை எல்லாம் வெளியில் சொன்னால் மிக அதிர்ச்சியாக இருக்கும். உங்கள் கதைக்கு நீங்கள் நேர்மையாக இருக்கும் பட்சத்தில், அது என்ன என்று உங்களுக்கு புரியும். சில சமயம் அந்த பிரிவு நம்மால் ஏற்படும், சில சமயம் அவர்களால் ஏற்படும். ஆனால் இது நடக்கவில்லையே என திரும்பி பார்த்து வருத்தப்பட்டது இல்லை. நிம்மதிடா சாமி என தான் தோன்றி இருக்கிறது. சில சமயம் கதையிலிருக்கும் கதாபாத்திரங்களை எடுத்து பயன்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி தான் சென்றிருக்கிறேன்.
எனக்கு அப்படி ஒரு வருத்தம் இருக்கிறது என்றால் `விஸ்வரூபம்' படத்தை நான் செய்ய முடியவில்லை என்று வருத்தம் இருக்கிறது. ஆனால் அது அவருடைய (கமல்ஹாசன்) கதை. ஆனால் அது என்னுடைய வெர்ஷனில் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்ற சின்ன ஏக்கம் இருந்தது. அது நல்ல ஸ்க்ரிப்ட், அதை என்னால் வித்யாசமாக எடுத்திருக்க முடியும். எல்லையை கடந்தால் அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை காட்டி இருக்க முடியும். அங்கிருக்கும் எதிர்மறை விஷயங்களை தான் பேசி இருக்கிறோம். ஆனால் அந்த பக்கம் இருக்கும் வாழ்க்கை என்ன என்பதெல்லாம் அந்தக் கதையில் இருந்தது.
எதிரிகள் என்பதெல்லாம் முத்திரை குத்தப்பட்டு வந்தது தானே. நாம் அங்கு சென்று பார்த்தால், வித்தியாசமாக இருக்கும். தினமும் அதனைப்பற்றி எதிர்மறையாக கேள்விப்பட்டு அங்கு போனால், ஒரு அம்மா உங்களுக்கு அன்பாக உணவளிப்பார். இங்கு எல்லோரும் வில்லன்கள் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லையே . இதை எல்லாம் அந்தக் கதை பேசி இருந்திருக்கும். `கான்' தான் அப்போது அதன் பெயர், `விஸ்வரூபம்' கிடையாது. அது நடந்திருக்க வேண்டும். சொல்ல வந்தது இது இல்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு." என்றார்.

