`பராசக்தி' கண்காட்சி... புது உத்தியை கையில் எடுத்த SK படக்குழு! | Parasakthi Exhibition
சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ளது `பராசக்தி'. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் இது. ஜனவரி 14ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
சிவாஜி கணேசனின் முதல் படமாக உருவாகி 1952ல் வெளியான படம் `பராசக்தி'. தற்போது அந்த `பராசக்தி' படத்தை பிரபலப்படுத்த ஒரு நிகழ்வை திட்டமிட்டுள்ளது சிவகார்த்திகேயனின் `பராசக்தி' படக்குழு. அதன்படி டிசம்பர் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திரைக்கதையில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கி, சிவாஜி கணேசன் நடித்த `பராசக்தி' படம் தொடர்பான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. அதாவது அப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கார், மாட்டுவண்டி, கலை பொருட்கள் என பல விஷயங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. மேலும் இந்த நிகழ்வில் `பராசக்தி' படம் தொடர்பான 10 நிமிட பிரத்யேக காட்சியும் வெளியிட உள்ளனர்.
இந்நிகழ்வில், சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஶ்ரீலீலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் பராசக்தி படத்தின் தலைப்பை பயன்படுத்த அணுகியதும் அப்பட தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம் நிறுவனமும், சிவாஜி குடும்பத்தாரும் வழங்கினர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜனவரியில் நடைபெற உள்ள `பராசக்தி' இசைவெளியீட்டு விழாவுக்கு சிவாஜி குடும்பத்தார் மற்றும் ஏ வி எம் நிறுவனத்தாரையும் அழைத்து `பராசக்தி' படக்குழுவினர் கௌரவிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இது உண்மையான என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

