`கூலி' அவ்வளவு மோசமான படமில்லை! - ரவிச்சந்திரன் அஷ்வின் | Coolie | Rajinikanth | Ravichandran Ashwin
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா, ஆமீர்கான், ஸ்ருதிஹாசன் எனப் பலரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இந்த ஆண்டு வெளியான படம் `கூலி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு நடுவே வந்த இந்தப் படம் வசூல் ரீதியில் பெரிய ஹிட் என்றாலும், விமர்சன ரீதியாக மோசமான வினைகளை சந்தித்தது. சமூக வலைதளங்களிலும் அதிகம் கிண்டல் செய்யப்பட படமாக மாறியது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
அந்தப் பேட்டியில் "ரசிகர்கள் என்பதை தனியாக எடுத்து வைத்துவிடலாம். இதனை வெளியில் கேட்கும் சப்தம் மற்றும் உள்ளே கேட்க்கும் சப்தம் என பிரித்துக் கொள்ளலாம். நமக்குள் போராடுவது ஒரு போராட்டம். அதே சமயம் வெளியில் இருந்து ஒரு சப்தம் வரும். இதில் எதனை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது முக்கியம். நடிப்போ, இல்லை என்னை போல விளையாடுவதோ எல்லோருமே ஒரு கட்டத்தில் அன்புக்காவும், மற்றவர்கள் நம்மை அங்கீகரிக்கவும் தான் செய்கிறோம். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருக்கிறது. படம் அருமை என சொன்னால், அது நமக்குள் ஒரு சந்தோஷத்தை கொடுக்கிறது. அங்கிருந்துதான் எல்லாம் தொடங்குகிறது. ஆனால் அங்கிருந்தே, இவரை இப்படி வைத்து படம் எடுத்தால் தான் நான் பார்ப்பேன் என சொல்வது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக மாறுகிறது. உதாரணமாக `ஜெயிலர்' படத்தை எடுத்துக் கொண்டால், அதில் எனக்குப் பிடித்ததே ரஜினி சாரை vulnerable ஆக காட்டியது. இடைவேளை வரை அவர் அமைதியான மனிதராக வருவதற்கு அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. அது எனக்கு பிடித்தது. ஒருவேளை அவர்`படிக்காதவன்', `உழைப்பாளி' போல முன்பு செய்த படங்களை மாதிரி மறுபடி நடித்தால் அது எனக்கு பிடிக்காமல் போகலாம். எனக்கு தலைவரை இப்படி காட்ட வேண்டாம் என்ற எண்ணமே இல்லை. அது வெறும் சப்தமே.
`கூலி' அவ்வளவு மோசமில்லை!
அடுத்த பிரச்னையாக நான் பார்ப்பது, ஓடிடி வந்ததில் இருந்து, நான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் முனைப்பை எடுப்பதில்லை. இந்த வருடம் `கூலி' வந்தது. இது என்னுடைய கருத்துதான், கண்டிப்பாக விவாதத்திற்கு உட்பட்டதுதான். அந்தப் படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகப்படியாக வந்தது. எனக்கு அதில் ஒரு பிரச்னை இருக்கிறது. பிடிக்கிறதோ இல்லையோ ஜென் ஸி தலைமுறை தங்களது மதிப்பீடுகளை பதிவிட்டு செல்கிறார்கள். அந்தப் படம் ஓடிடியில் வந்தது. என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என பார்ப்பேன். என்னால் `கூலி' படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது. அதனை பார்த்து முடித்த பின் ஒரே ஒரு கேள்வி தான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். `இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டேனா?'. ஒரு விமர்சகராக அந்தப் படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவு அந்தப் படம் மோசமில்லை" என்றார்.

