மிஷ்கின் கொலை காட்சிகளை மிக ரசித்து எடுக்கிறார்! - ராம் | Ram | Mysskin | Train
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் `ட்ரெய்ன்'. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் பேசிய ராம் " `சைக்கோ' (2020) திரைப்படம் வெளியாகி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குநர் மிஷ்கினின் ஒரு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் அவர் 'பிசாசு 2', 'ட்ரெயின்' என இரண்டு படங்களை எடுத்து முடித்துள்ளார். மற்றொரு படம் பாதியிலேயே நிற்கிறது. ஒரு ஃபிலிம் மேக்கராக இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு படத்தை திரைக்குக் கொண்டு வர அவர் சந்தித்த துரோகங்கள், ஏமாற்றங்கள், அவதூறுகள் மற்றும் பலிச்சொற்கள் ஏராளம்.
இத்தனை வலிகளையும் அவமானங்களையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் எந்தவொரு மனிதனும் காணாமல் போயிருப்பான். ஆனால், மிஷ்கின் இதையெல்லாம் தன் இடது கையால் தள்ளிவிட்டு நிமிர்கிறார் என்றால், அதற்கு மனிதர்கள் மீது அவர் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே காரணம். இவ்வளவு காயங்களுக்குப் பிறகும் மனிதர்கள் மீது நம்பிக்கை போக வேண்டும். ஆனால் அவருக்கு நம்பிக்கை கூடி இருக்கிறது. அந்த நம்பிக்கை தான் மிஷ்கினை சினிமா உலகில் தக்க வைத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மிஷ்கினுடைய படமே இது இரண்டு தான். குற்றமும் நம்பிக்கையும் தான்.
தமிழ் சினிமாவில் 'மாஸ்டர் ஆஃப் த்ரில்லர்ஸ்' அல்லது த்ரில்லர் படங்களின் தந்தை என்று மிஷ்கினைத் தாராளமாகக் கூறலாம். 'நந்தலாலா' தவிர அவரது பெரும்பாலான படங்கள் த்ரில்லர் பாணியைச் சேர்ந்தவைதான். கவிஞர் கலீல் ஜிப்ரான் தனது 'குற்றமும் தண்டனையும்' தத்துவத்தில், "கொலை செய்யப்பட்டவனுக்கும் அந்த மரணத்தில் பங்குண்டு. கொள்ளையடிக்கப்பட்டவனுக்கும் அந்தத் திருட்டில் பங்குண்டு. இந்தச் சமூகத்தில் நடக்கும் தீமைகளில் நாம் அறியாமலேயே நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது" என்பார்.
இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் மிஷ்கினின் உலகமும் கதைகளும் விரிகின்றன. ஏனென்றால் அவை வெறும் த்ரில்லர் அல்ல. மெய்ன்ஸ்ட்ரீமில் த்ரில்லர் செய்தால் ஜெயிக்கலாம் என அவர் செய்யவில்லை. அவருக்கு த்ரில்லர் பிடிக்கிறது. கொலை காட்சிகளை மிக ரசித்து எடுக்கிறார். குற்றவாளிகளின் பின்னணியில் இருக்கும் நியாயங்களையும், இறுதியில் அவர்கள் மீது நமக்குக் கருணை வர வைக்கும் ஒரு உன்னதக் கலையாகவும் அது மாற்றப்படுகிறது.
மறுபுறம், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' 'நானும் ரௌடிதான்', தலைவன் தலைவி' போன்ற படங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ஹியூமரில் 100 கோடி கிளப் வரை மெயின்ஸ்ட்ரீம் ஹிட் கொடுத்த எக்ஸ்ட்ரார்டினரி ஹீரோ விஜய் சேதுபதி. அவர் ஏற்கனவே த்ரில்லர் பாணியில் 'பிட்சா', 'மகாராஜா' போன்ற பெரிய வெற்றிகளைக் கொடுத்துள்ளார். இவர்களின் கூட்டணி திரையில் எப்படிப்பட்ட மேஜிக்கை நிகழ்த்தியிருக்கும் என்பதை முதல் நாளே தியேட்டரில் பார்க்க ஒட்டுமொத்த சினிமாவும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது." என்றார்.

