"நான் நடிச்ச காட்சி நீக்கம்.." கண்கலங்கிய ‘ஜனநாயகன்’ நடிகை! | Anandhi | Jana Nayagan
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசிப் படமாக உருவானது ‘ஜனநாயகன்’. பல தடைகளை எல்லாம் கடந்து ஏழு மாதங்களுக்கு பின் நேற்று (ஜூலை 23) வெளியானது. இப்படத்தில், தான் நடித்த காட்சி நீக்கப்பட்டது குறித்து நடிகை ஆனந்தி கண்கலங்கியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "நான் நிறைய திரைப்படங்களில் நடிக்கிறேன்; ஆனால், அக்காட்சிகள் படத்தொகுப்பில் நீக்கப்படுகின்றன. அதற்காக நான் என்றைக்குமே பெரிய அளவில் வருத்தப்பட்டதில்லை.
ஆனால், 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது எனக்கு மிகவும் மனவேதனையைத் தருகிறது. ஏனெனில், என்னுடைய கம்பேக்கிற்குப் பிறகு நான் முதன்முதலில் ஒப்பந்தமான திரைப்படம் இதுதான். இந்த ஒரு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக மட்டுமே கடந்த ஒன்றரை ஆண்டாக நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதுவும் விஜய் சாருடன் இணையக்கூடிய காட்சிகள் என்பதால் என் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருந்தது.
உண்மையிலேயே நான் திரைப்படங்களில் நடிக்க வந்த நோக்கமே, தளபதி விஜயுடன் ஒரே ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசையினால்தான். அது என்னுடைய நீண்ட நாள் கனவாகவும் இருந்தது. திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது; அனைவரும் கண்டிப்பாகத் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள்.
முக்கியமாக, பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தித் திரைப்படம் மிகச் சிறப்பாக உருவாகியுள்ளது" எனக் கூடியுள்ளார். இதற்கு முன்பு 29, கருப்பு ஆகிய படங்களிலும் இவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

