" 'வாழை' படத்தை 6 பாகங்களாக எடுக்க திட்டம்" - மாரி செல்வராஜ் | Vaazhi | Mari Selvaraj
தூத்துக்குடி வ.உ.சி கலைக்கல்லூரியில் பவள விழாவில் கலந்துகொண்ட மாரி செல்வராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில் அவர் அடுத்து இயக்கும் படம் பற்றி கேட்கப்பட, "அடுத்ததாக தனுஷ் சாரின் படம் இயக்க உள்ளேன். இந்தாண்டு செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இது ஒரு வரலாற்றுத் திரைப்படம். முதல் முறையாக பேண்டஸி + பொலிட்டிகள் என்ற ஜானரில் படம் செய்கிறேன். என் திரைப்பயணத்தில் இது பெரிய படமாக இருக்கும்" என்றார்.
’’உங்களின் எந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க விரும்புகிறீர்கள்’’ என்றதும், "என்னுடைய படங்களில் ’வாழை’ மட்டும்தான் சீக்குவல் எடுக்கும் திட்டம் இருக்கிறது. அதனை 6 பாகங்கள் வரை எடுக்க திட்டமிட்டுள்ளேன். எப்போதெல்லாம் ஓர் இடைவேளை கிடைக்கிறதோ, அப்போது அதைச் செய்ய உள்ளேன். அது ஓர் ஆத்மார்த்தமான திரைப்படம். என்னுடைய பெரிய பெரிய கமிட்மெண்ட்ஸ் இடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ’வாழை’யின் சீக்குவல் செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளேன், பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.
விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்கப்பட, "விஜய் சார் மேல் சின்ன வயதில் இருந்தே ப்ரியம் இருக்கிறது. நான் சினிமாவை நோக்கி நகர அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனாக அவரை எனக்குப் பிடிக்கும். ஆனால் எனக்கு என்று ஓர் அரசியல் நிலைப்பாடு இருக்கிறது. அதனை முன் வைத்துதான் என் கலையையும் நான் பயன்படுத்துகிறேன். அதேசமயம், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவருக்கு வாழ்த்துகள் சொல்லிக் கொள்கிறேன்" என்றார்.
’’அரசியலுக்கு வரும் ஆர்வம் இருக்கிறதா’’ எனக் கேட்டதும், "நான் அடுத்ததாக நான்கு படங்கள் ஒப்பந்தம் செய்துள்ளேன். இவை கொரோனா சமயத்திலேயே செய்ய வேண்டியது. எல்லாம் தள்ளித் தள்ளிப் போய் இங்கே வந்திருக்கிறது. நான் மிக அழுத்தமாகச் சொல்வது என்னுடைய ஆயுதம் என் கலைவடிவம் தான். அரசியலாக எனக்கு முன் நிறைய பேர் மிக திடகாத்திரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அதன் இன்னொரு வடிவமாக கலை வடிவில் அதைச் செய்து வருகிறேன். அதன் வழியாக நிறைய பேரிடம் உரையாட நினைக்கிறேன்" என்றார் மாரி செல்வராஜ்.

