விடாமுயற்சி பற்றி அஜித் சொன்னது என்ன? மனம் திறந்து பேசிய மகிழ் திருமேனி!
விடாமுயற்சி படம் குறித்து படத்தின் நாயகன் அஜித்குமார் கூறிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. பொங்கலுக்கு வெளியாகி ஒரு கலக்கு கலக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், படம் பொங்கலுக்கு வெளியாகாது என்று அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது தயாரிப்பு நிறுவனம்.
புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31 முடிவில், நள்ளிரவில் ட்ரைலர் அப்டேட் வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, புத்தாண்டு வாழ்த்தை கூறி, அனுகுண்டு ஒன்றையும் தூக்கிப்போட்டது படக்குழு. ஆம், சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக அறிவித்தது, அஜித் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தயாரிப்பு நிறுவனம் மீதும், படக்குழு மீதும் சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில்தான், டப்பிங்கின்போது படம் குறித்து அஜித் தன்னிடம் கூறியதை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி.
“ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் சராசரி மனிதன், அவரால் முடிந்த அளவுக்கு போராடுகிறார். இதையே படமாக்க வேண்டுமென அஜித் விரும்பினார். அதைத்தான் நானும் படமாக்கியிருக்கிறேன்” என்ற மகிழ் திருமேனி, “இதுபோன்ற படங்களில்தான் நான் நடிக்க விரும்புகிறேன்” என்று அஜித் கூறியதாக பகிர்ந்துகொண்டார். முன்பு வெளியான டீசரை பார்த்தபோதே, வழக்கமான அஜித் படமாக இல்லாமல், சட்டுலாக ஒரு பேங்கர் வரும் என்று எதிர்பார்ப்பு கூடியது.
அஜித்துடன் படம் முடித்தது குறித்து மகிழ் திருமேனியோ, படக்குழுவில் இருக்கும் மற்றவர்களோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும், சொன்ன தேதியில் படத்தை வெளியிடாதது ஏன் என கேள்விக்கணைகளை தொடுத்து வருகின்றனர் ரசிகர்கள். ஒருபடி மேலாக, இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிக்கைவிட்டது இருக்கட்டும், என்ன நடந்தது என்பதை உங்கள் அறிக்கை பாணியிலேயே விளக்குங்கள் என்றும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவை நோக்கியும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சில காரணங்களால் பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி தள்ளிப்போன நேரத்தில், பாலாவின் 'வணங்கான்', ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை', ஷேன் நிகம் நடித்துள்ள 'மெட்ராஸ்காரன்', சுசீந்திரனின் '2K லவ் ஸ்டோரி', சிபி சத்யராஜின் 'டென் ஹவர்ஸ்', சண்முக பாண்டியனின் 'படை தலைவன்', கிஷன் தாஸின் 'தருணம்' ஆகிய படங்கள் பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாகிறது. மேலும் ஷங்கர் இயக்கியுள்ள தெலுங்குப் படமான 'கேம் சேஞ்சர்' தமிழ் வெர்ஷனும் வெளியாகவுள்ளது.
இவை அனைத்தையும்தாண்டி, ‘ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி படத்தையாவது பொங்கலுக்கு இறக்கிவிட்டிருக்கலாமே.. அவர்கள் தயாராகத்தானே இருந்தார்கள். நீங்கள்தானே குறுக்கே வந்து பொங்கல் ரிலீஸ் என்று கூறினீர்கள். கடைசியாக வந்து தள்ளிப்போகிறது’ என்றால் எப்படி என்றும் ரசிகரக்ள் பலரும் விடாமுயற்சி படக்குழுவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் டப்பிங், ரீ ரெக்கார்டிங் மற்றும் சென்சார் உள்ளிட்ட பணிகள் முடிவடையாததால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. எனினும், அடுத்தகட்ட நகர்வு குறித்து படக்குழு விரைவில் ஒரு விளக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.