"சிரஞ்சீவியை விட விஜய் நல்ல டான்சர்..." - சர்ச்சைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம் | Vijay | Chiranjeevi
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள `ரிவால்வர் ரீட்டா' படம் நவம்பர் 28 வெளியாகவுள்ளது. இந்தப் படம் தொடர்பான தெலுங்கு செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் "இது ஒரே நாளில் நடக்கும் கதையாக உருவாகி இருக்கிறது. நீங்கள் டிரெய்லரில் என்ன பார்த்தீர்களா அது எல்லாம் ஒரேநாளில் நடக்கும். இது ஒரு ஜாலியான கமர்ஷியல் படம், நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார் தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஜாலியான பாத்திரத்தில் நடித்தவர், இப்போது துப்பாக்கி பிடித்து வரும் பாத்திரம் நடித்திருக்கிறீர்கள், இதை பற்றி நினைக்கையில் என்ன தோன்றுகிறது எனக் கேட்கப்பட "இதனை ஒரு பயணமாக நினைக்கிறேன். நான் எங்கிருந்து துவங்கி, இங்கு வந்திருக்கிறேன் என்பதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சியே. அப்போது நான் இதனை எல்லாம் நினைத்து பார்த்ததே இல்லை. `மகாநடி' படம் எனக்கு இப்படியான பாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுதான் எனக்கு விதவிதமான பாத்திரங்களை என்னிடம் கொண்டு வருகிறது. அதற்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன். `மகாநடி' படம், என்னால் பெண்ணை பாத்திரங்களை மையமாக கொண்ட படங்கள் செய்ய முடியும் என்ற பாதையை அமைத்துக் கொடுத்தது. ரிவால்வர் ரீட்டாவில் டார்க் காமெடி ஜானர் படம். பெண்களை முதன்மையாக கொண்ட டார்க் காமெடி படங்கள் மிகக்குறைவு. அப்படிப் பார்க்கையில் என்னால் இந்தப் பயணத்தில் இந்தப் படத்தை செய்ய முடிவது மகிழ்ச்சி" என்றார்
கமர்ஷியல் படங்களில் நடிக்கும் நடிகைகள் வேறு வகை படங்களில் நடித்தார் அவர்கள் மீதான பார்வை மாறும், அவர்களை கமர்ஷியல் படங்களில் அணுகுவது குறையும். அந்த பயம் உங்களுக்கு இருந்ததா என்றதும் "அந்த பயம் ஆரம்பத்தில் இருந்தே உண்டு. ஆனால் அதனை உடைக்க வேண்டும் என்பதே என் எண்ணம். நான் `மகாநடி' நடித்த போது என் வயது 24. அதில் 45 வயது பாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். அதன் பின்பும் 6 வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தேன். மீண்டும் கமர்ஷியல் படம் செய்தேன். இவை எல்லாம் வழக்கமாக நடக்காது. ஆனால் நான் அதனை உடைக்க நினைத்தேன். இந்த பேலன்ஸ் எனக்கு பிடித்திருக்கிறது. நான் இதைத் தான் செய்வேன் என எந்த வரையறையும் வகுத்துக் கொள்ளவில்லை" என்றார்.
நடிப்புக்கும் 9 - 6 பணி போன்ற நேர வரையறை வேண்டும் என பேச்சுக்கள் எழுந்திருக்கிறது, இதனை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு "நான் 9 - 6 நடித்திருக்கிறேன், 9 - 9 நடித்திருக்கிறேன், 9 - 2 கூட நடித்திருக்கிறேன். நான் `மகாநடி' நடித்துக் கொண்டிருந்த போது அதனோடு சேர்த்து `அஞ்ஞாதவாசி', `சாமி 2', `சர்க்கார்', `சண்டக்கோழி 2', `தானா சேர்ந்த கூட்டம்' என 5 படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். காலையில் ஒரு படம், இரவில் ஒரு படம் என நடித்தேன். இப்போது 9 - 6 பணிநேரம் என்றால், ஒரு நடிகருக்கு அது காலை 9 மணிக்கு மேக்கப் உடன் தயாராக இருக்க 7.30 மணிக்கு ஸ்பாட்டில் இருக்க வேண்டும், எனவே 6.30க்கு கிளம்ப, 5.30 எழ வேண்டும். மாலை ஷுட் முடிந்து கிளம்ப 7 மணிக்கு மேல் ஆகிவிடும். வீட்டுக்கோ, ஹோட்டலுக்கோ திரும்பி வர 9 மணி ஆகிவிடும். உடற்பயிற்சி, சாப்பாடு எல்லாம் முடித்து தூங்க இரவு 11 மணி ஆகிவிடும். மீண்டும் காலை 5.30க்கு எழ வேண்டும். 9 - 6 நடித்தாலே இவ்வளவு சிக்கல் என்றால், நேரம் இன்னும் அதிகரித்தால் அந்த நிலையை யோசித்துப் பாருங்கள். தூங்கும் நேரம் இன்னும் குறையும். இதுவே தொழில்நுட்ப கலைஞர்களின் நிலையை யோசித்து பாருங்கள், அவர்கள் எங்களுக்கு முன்பு வந்து, நாங்கள் சென்ற பின்பே கிளம்புவார்கள். இது தமிழ், தெலுங்கு சினிமா துறை நிலைமைதான். மலையாளத்தில் வேலை 12 மணிநேரம். இடைவேளையே இல்லாமல் பணியாற்றுவார்கள். அவர்களுக்கெல்லாம் தூக்கம் 3 மணிநேரம் கிடைத்தாலே பெரிய விஷயம். நாம் எப்படி உணவு, உடற்பயிற்சி முக்கியம் என சொல்கிறோமோ, அது போல தூக்கமும் முக்கியம். இதுதான் இப்போது உள்ள நிலை. என்னால் 9 - 6 நடிக்கவும் முடியும், அதற்கு மேலும் முடியும். ஆனால் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் என்பதால் 9 - 6 நேரத்தை பலரும் கேட்கிறார்கள்" என விரிவாக பதில் அளித்தார்.
சிரஞ்சீவியை விட விஜய் நல்ல டான்சர் என நீங்கள் கூறியது இங்கு சர்ச்சையானது, விஜய் டான்ஸ் சிறப்பானது என நீங்கள் கூற காரணம் என்ன எனக் கேட்டதும் "சிரஞ்சீவி அவர்களுக்கே நான் எவ்வளவு பெரிய விஜய் ரசிகை என தெரியும். எனக்கு சிரஞ்சீவியும் மிகப்பிடிக்கும், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். இதை நான் யாரையும் புண்படுத்த கூறவில்லை. சிரஞ்சீவி அவர்களிடம் ஜாலியாக பேசும்போது, அவரே என்னிடம் யார் பிடிக்கும் என கேட்டிருக்கிறார், அவரிடமே இதை கூறி இருக்கிறேன். விஜய் சார் டான்ஸ் பிடிக்கும் எனவும் அவரிடம் கூறினேன். அவர் அதை மிக உற்சாகமாக எடுத்துக் கொண்டார். சிரஞ்சீவி இந்த நாட்டின் பெரிய ஸ்டார். என் அம்மா அவருடன் நடித்திருக்கிறார். என்னிடம் அப்படி கேட்கும் போது எனக்கு என்ன தோன்றியதோ அதை கூறினேன். மற்றபடி யாரையும் மரியாதை குறைவாக கூற அல்ல" என்றார்.

