"ஏன் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள்?" - நடிகை கயாடு லோஹர் வேதனை | Kayadu Lohar
'முகில்பேட்டே' கன்னட படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். அதன் பின் மலையாளத்தில் 'பதொன்பதம் நூட்டாண்டு', தெலுங்கில் 'அல்லூரி', மராத்தியில் 'ஐ பிரேம் யு' போன்ற படங்களில் நடித்தார். பின்னர் இந்தாண்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த `டிராகன்' படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தார் கயாடு. இப்படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பால் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆனார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன. அதே சமயம் அவரை பற்றிய அவதூறுகளும், மோசமான கமெண்ட்ஸ்களும் பரவவும் செய்தன. இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதை பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார் கயாடு.
இந்த விஷயத்தை பற்றி பேசுகையில் "நான் இதை பற்றி சில காலமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நான் சினிமா பின்னணியிலிருந்து வரவில்லை, இது எனக்குப் புதிதான ஒன்று. என்னை பற்றி மற்றவர்கள் பேசுவது, இவ்வளவு பாதிப்பை என்மேல் செலுத்தும் என நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நான் தூங்க செல்லும் முன், என்னை பற்றி மக்கள் இப்படி நினைத்து இருக்கிறார்கள் என யோசிக்கும் போது கஷ்டமாக இருக்கும். நான் இந்த உலகில் ஒருவரைப் பற்றியும் இப்படி நினைத்ததே இல்லை. மற்றவர்களுக்கு நல்லதை மட்டுமே நினைக்கும் நபர் நான்.
எப்போதும் நான் என் கனவுகளை மட்டுமே பின் தொடர்ந்தேன். நான் என்ன தவறு செய்தேன் என எனக்கு தெரியவில்லை. நான் இப்படியான கமெண்ட்ஸ் பார்க்கையிலும் மற்றவர்கள் என்னை பற்றி தவறாக பேசுவது தெரிய வருகையிலும் அதை எதிர்கொள்வது சுலபமானது இல்லை. எனக்கு வரும் ஒரே கேள்வி, ஏன் இது வருகிறது? ஏன் என்னை குறிவைத்து தாக்குகிறார்கள்? நான் சார்ந்துள்ள துறையில் இதுவும் ஒரு பாகம் என எனக்கு தெரியும். ஆனால் அது சுலபமானது இல்லை. இப்போது என்னால் அதனை விவரிக்க முடியவில்லை. ஆனால் சமீபமாக இந்த விஷயங்கள் என்னை மிகவும் பாதிக்கிறது. இப்படி நடப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. இதை அனைவரும் சுலபமாக கையாள்வார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அப்படி இல்லை. நீங்கள் பேசுவது ஒரு உண்மையான நபரை பற்றி, அது அவரை பாதிக்கும். எனவே மற்றவரை கருணையோடு அணுகுங்கள். மோசமான கமெண்ட்களை சம்பந்தப்பட்ட நபர் படிக்கும் போது மோசமான உணர்வை ஏற்படுத்தும் என புரிந்து கொள்ளுங்கள். இதனை விவரித்துவிட்டேனா என தெரியவில்லை, ஆனால் இப்போது என் மனதில் இருப்பவை இதுதான்" என்றார்.

