கார்த்தியின் `வா வாத்தியார்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Vaa Vaathiyaar | Karthi | Nalan Kumarasamy
கார்த்தி - நலன் குமாரசாமி கூட்டணியில் உருவாகியுள்ள `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. `சூது கவ்வும்' படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நலன் குமாரசாமி. இப்படத்தை தொடர்ந்து X: Past Is Present என்ற படத்தில் Summer Holiday என்ற பகுதியையும், `காதலும் கடந்துபோகும்' படத்தையும், குட்டி ஸ்டோரி அந்தாலஜியில் `ஆடல் பாடல்' குறும்படத்தையும் இயக்கினார்.
அதன் பிறகு நலன் இயக்கத்தில் இரண்டு ஹீரோ இணைந்து நடிக்கும் படம் ஒன்றை இயக்குவார் என சொல்லப்பட்டது. ஆனால் 2023ல் கார்த்தி - நலன் கூட்டணியில் படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. 2023 மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தில் க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். இதில் நடிகர் எம் ஜி ஆரின் தாக்கம் அதிகம் உள்ள நபராக கார்த்தி நடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சில பணச் சிக்கல்களால் இப்படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு மெதுவாகவே படம் உருவானதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்து டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என சமீபத்தில் அறிவித்தனர். இன்று ரிலீஸ் தேதி டிசம்பர் 5 என அறிவித்துள்ளது படக்குழு. இது தவிர கார்த்தி நடிப்பில் `சர்தார் 2' படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்ததாக `டாணாக்காரன்' தமிழ் இயக்கத்தில் `மார்ஷெல்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து கைதி 2, HIT 4 படங்களில் நடிக்கவுள்ளார்.