ஸ்மிருதி வைத்த கோரிக்கை.. ACA–VDCA Stadium கேலரிகளுக்கு மிதாலி, ரவி கல்பனா பெயர்கள்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிக்கு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயர்கள் சூட்டப்பட இருக்கின்றன.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள கேலரிகளுக்கு, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயர்களைச் சூட்டவேண்டும் என தற்போதைய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆந்திர தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஸிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றின்போது கோரிக்கை வைத்தார். இதை ஆந்திர அரசும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், விரைவில், அவர்களது பெயர்கள் சூட்டப்பட இருக்கிறது.
தற்போது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 12ஆம் தேதி இந்த ஸ்டேடியத்தில் மோத இருக்கிறது.
இதையடுத்து, இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக மிதாலி, கல்பனா பெயரிலான கேலரிகள் திறக்கப்பட உள்ளன. இந்திய கிரிக்கெட்டின் பாதையை வடிவமைத்து எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் அளித்த பெண் விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடைகளை உடைத்து புதிய அளவுகோல்களை அமைப்பதன் மூலம் இந்தியாவில் விளையாட்டை மறுவரையறை செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த ஸ்டாண்டுகளுக்கு பெயரிடப்பட்டதை ACA விவரித்துள்ளது.
23 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய முன்னாள் கேப்டனான மிதாலிராஜ், 232 ஒருநாள் போட்டிகளில் 50.68 சராசரியுடன் 7,805 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஏழு சதங்கள் அடங்கும். 89 டி20 போட்டிகளில் 17 அரைசதங்களுடன் 2,364 ரன்களையும், 12 டெஸ்ட் போட்டிகளில் 43.68 சராசரியுடன் 699 ரன்களையும் குவித்துள்ளார். அதேநேரத்தில், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கல்பனா 7 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தாலும் அவரது பிரவேசம் இந்த மண்டலத்தில் இருந்து அருந்ததி ரெட்டி, மேகனா, ஸ்ரீசரனி உள்ளிட்டோர் இந்திய அணிக்குள் நுழைய உத்வேகம் அளிப்பதாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.