ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள `சிக்மா' ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Jason Sanjay | Sigma
சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சிக்மா'. தமிழ்நாடு முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவானது. இப்படத்தில் சந்தீப் உடன் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோகி ஜாபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2023ம் ஆண்டு லைகா தயாரிப்பில் ஜேசன் படம் இயக்குகிறார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. படப்பிடிப்பும் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய் படம் பற்றி கூறுகையில் "‘சிக்மா’ எனக்கு மிகவும் சிறப்பான மற்றும் மறக்க முடியாத பயணமாக இருந்தது. எனது கதையில் நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு மனமார்ந்த நன்றி. அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி. ஜூலை 31ஆம் தேதி ‘சிக்மா’வை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறோம். விரைவில் படம் குறித்தான மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்ஸ் பகிர இருக்கிறோம்" எனக்கூறியுள்ளார். படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

