அரசனில் சிம்புவுடன் தனுஷ் வருவாரா? - தயாரிப்பாளர் தாணு தந்த பதில் | Arasan | Simbu | Dhanush
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இவரது தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கி சிம்பு நடிக்கும் `அரசன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் தாணு.
அந்தப் பேட்டியில் "அரசன் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. திருஷ்டிபட்டுவிடும்போல இருக்கிறது. நேற்று இயக்குநர் பேசும்போது `சார் ஹீரோ கேரவனே போவதில்லை, ஸ்பாட்டில் அமர்ந்து எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்' என்றார். யூனிட் மொத்தமும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரும் என்னை நன்றாகp பார்த்துக் கொள்கிறீர்கள் என சிம்புவும் சந்தோஷப்படுகிறார்" என்றார்.
தொடர்ந்து `வடசென்னை' யுனிவர்ஸில் நடக்கும் கதைதான் `அரசன்' என்பதால், தனுஷ் இப்படத்தில் வருவாரா எனக் கேட்கப்பட "இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அவர் ஜெயிலில் இருக்கும்போது, வேறு ஒரு சம்பவம் நடக்கும்படியான கதை. விஜய் சேதுபதி உள்ளே வந்திருப்பதால் இன்னும் மிரட்டலாக இருக்கும்" என்றார்.
அடுத்த படங்கள் பற்றி கூறுகையில் "வாடிவாசலுக்கு அனிமேட்ரானிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன, அது முடிந்ததும் ஒரு நல்ல நேரம் பார்த்து துவங்கிவிடலாம். ஆனால் அது ஒரு உலக தமிழருக்கான அங்கீகாரமாக இருக்கும் என்பது மட்டும் உறுதி. அடுத்ததாக பெரிய படம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடக்கிறது, பேன் இந்திய படமாக ஒரு உச்சமாக இருக்கும். பின்னர் மாரி செல்வராஜ், கௌதம் மேனன் ஆகியோருடன் பயணங்கள் இருக்கிறது" என்றார் தாணு.

