
`ஜெயிலர்' படத்தில் தமன்னா ஆடிய காவலா பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. படத்தை பிரபலப்படுத்தியதில் அந்தப் பாடலுக்கும் பங்குண்டு. அதே போல `ஜெயிலர் 2' படத்திலும் ஒரு பாடல் இருக்கிறது எனவும் அந்தப் பாடலில் பிரபல பாலிவுட் நடிகை நோரா ஃபதே ஆடுகிறார் எனவும் சொல்லப்படுகிறது.
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள `ஜனநாயகன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் டிசம்பர் 18 வெளியாகும் என அறிவிப்பு.
சிவகார்த்திகேயனின் 25வது படம் `பராசக்தி'. இப்படத்திலிருந்து `அடி அலையே', `ரத்னமாலா', `நமக்கான காலம்' ஆகிய பாடல்கள் வெளியாகின. இப்போது அடுத்து வெளியாக உள்ள Tharakku Tharakku என்ற புரட்சி பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார் என பதிவிட்டுள்ளார் ஜி வி பிரகாஷ்.
பிரதீப் ரங்கநாதன் - ஏஜிஎஸ் நிறுவனத்தின் கூட்டணியில் `லவ் டுடே', `டிராகன்' படங்கள் உருவாகி பெரிய ஹிட்டானது. இதன் பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது எனவும் அப்படத்தை பிரதீப்பே இயக்கி நடிக்கிறார் எனவும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
விக்ரம் பிரபு, LK அக்ஷய்குமார் நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள `சிறை' படத்தின் `மின்னு' பாடல் வெளியாகியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, பத்மஜா பாடியுள்ளனர்.
மோகன்லால் நடித்துள்ள `Vrusshabha' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு. இப்படம் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது.
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள '45' பட ட்ரெய்லர் வெளியானது.
சன்னி தியோல் நடித்து 1997ல் வெளியான `Border' படத்தின் இரண்டாம் பாகம் சன்னி தியோல், வருண் தவான், தில்ஜீத் நடிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படம் அடுத்தாண்டு ஜனவரி 23 வெளியாகிறது.
ஆமீர்கான் நடித்து வெளியாகி ஹிட்டான படம் `Sitaare Zameen Par'. இப்படம் உருவான விதம் மற்றும் இதில் நடித்த சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களின் பேட்டியை `Sitaaron Ke Sitaare' என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கி உள்ளனர். இதனை டிசம்பர் 19ம் தேதி தியேட்டரில் வெளியிடுகின்றனர்.
உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே'. இப்படத்தின் டீசர் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்துடன் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், படத்திற்கு நான்கு டீசர் வரும் என்கிறார்கள். இதில் முதல் டீசர் கேப்டன் அமெரிக்காவை மையப்படுத்தியதாகவும், இரண்டாவது டீசர் தோரை மையப்படுத்தியதாகவும், மூன்றாவது டீசர் டாக்டர் டூமை மையப்படுத்தியதாகவும், இறுதி டீசர் அனைத்தையும் உள்ளடக்கிய பொதுவானதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஒவ்வொரு டீசரும் ஒவ்வொரு வாரம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்துடன் இணைத்து திரையரங்குகளில் வெளியிட உள்ளனராம். இதில் முதல் டீசர் டிரெய்லர் ஏற்கனவே இணையத்தில் கசிந்து பெரும் பேசு பொருளாகியிருக்கிறது.