'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? தயாரிப்பாளர் தந்த அப்டேட் | Jana Nayagan | Venkat K Narayana
சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாகத் தவெக வெற்றி பெற்றுள்ளது. நேற்று காலை முதலமைச்சராகப் பதவியும் ஏற்றிருக்கிறார் விஜய். இந்த நிகழ்வில் விஜயுடன் நெருக்கமாக சினிமாவில் பல காலம் பயணித்த அவருடைய நண்பர்களும் கலந்துகொண்டனர். இதில் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவும் கலந்துகொண்டார்.
அந்நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெங்கட் நாராயணா, "நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன். இன்னும் இரு வாரங்களில் அப்படம் (ஜனநாயகன்) வெளியாகும். CBFC-ல் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தை வெளியிடுவோம். விஜய் உண்மையான 'ஜனநாயகன்'. அவர் மாற்றத்தை கொண்டுவருவார். ஒரு புதிய அத்தியாயம், புதிய தலைமை துவங்கியுள்ளது. அவரின் தலைமையின்கீழ் தமிழ்நாடு சிறப்பாக இருக்கும். எனக்கு விஜய் சாரை தனிப்பட்ட முறையில் தெரியும். மிகவும் ஒழுக்கமான, அர்பணிப்பான மனிதர். விஜய் சார் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டை அவர் உறுதி செய்வார்.
நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவரின் கடைசி படத்தை நான் தயாரித்துள்ளேன். அதுதான் 'ஜனநாயகன்'. ஆனால், இப்போது அவரே தமிழ்நாட்டு மக்களுக்கு 'ஜனநாயகன்' ஆகிவிட்டார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
“ ’ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது” குறித்து கேட்கப்பட, "அது பரவாயில்லை, அதெல்லாம் முடிந்துபோன கதை. அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை. அது துக்ககரமானததான். ஆனால் அதை நாங்கள் கையாண்டுகொள்வோம" என்றார்.

