"பஞ்சாயத்துக்கு தீர்ப்பு வழங்கப்போய், நம்ம படத்த செஞ்சிட போறாங்க..." - விஜய் சேதுபதி | Happy Raj
ஜி வி பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஹேப்பி ராஜ்'. இதில் ஸ்ரீ கௌரிப் ப்ரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியம் எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும் போது "முதலில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ்குமரன் சாருக்கும் அவரது அணிக்கும் எனது வாழ்த்துகள். ஆனால் நமக்கு எல்லாம் செட்டாகாது சார். ஏதாவது பஞ்சாயத்து என உட்கார்ந்து, அதற்கு தீர்ப்பு வழங்கப்போய், நம்ம படத்துக்கு ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான். பொறுப்பு என்று ஒன்று கொடுத்தால், அந்த பொறுப்பை பொறுப்பாக செய்யவேண்டும். அதை செய்வதால் ஏதாவது பிரச்னை வந்தால் எப்படி. மற்றபடி வெற்றி பெற்ற உங்களுக்கு என் வாழ்த்துகள்.
பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன். எந்த தயாரிப்பாளர் புதிதாக வந்தாலும், அவர்களை வருக வருக என வரவேற்கிறோம். சினிமா மிகவும் அற்புதமான தொழில், யார் என்ன சொன்னாலும் பயப்படவே பயப்படாதீர்கள். இதை என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். எப்படி நடிகரோ, இயக்குநரோ சினிமாவை படிக்கிறார்களோ, அதேபோல் தயாரிப்பாளர்கள் வியாபாரத்தையும், ஸ்க்ரிப்ட்டையும் படித்தால் நன்றாக இருக்கும். படியுங்கள், நிறைய படம் பண்ணுங்கள். இந்தப் படத்தில் மரியாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
ஜி வியே நன்றாக பாட்டு போடுவார். ஆனால், ஜஸ்டின் உடன் இரண்டாவது முறை இணைந்து பணியாற்றுகிறார். ஜஸ்டின் எனக்கு மிகவும் நெருக்கமான நபர். பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்து பழக்கம். அவன் மீது அன்பும் மரியாதையும் எனக்கு உண்டு. சமீபத்தில் அவனுடைய சர்வம் மாயா, சிறை போன்ற படங்கள் எல்லாம் ஹிட். அவன் எந்த உயரத்தை அடைய வேண்டும் என நினைக்கிறேனோ, அதை நோக்கி பயணிக்கிறான்.
படத்தின் ட்ரெய்லர் மிக ஜாலியாக, சுவாரஸ்யமாக இருந்தது. ஜி வி எப்போதுமே ஸ்கூல் பையனாக நடிக்கலாம் போல. 90ஸ், ஜென் ஸீ, இன்னும் 50 வருடம் கழித்து எடுத்தால் கூட ஸ்கூல் பையனாக நடிப்பார் போல. ரொம்ப நன்றாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துகள்." என்றார்.

