ரஜினியை இயக்கும் `டான்' சிபி சக்கரவர்த்தி... Thalaivar 173 கூட்டணியின் பின்னணி என்ன?
ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'டான்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரஜினி அவரை நேரில் சந்தித்து பாராட்டியதோடு, புதிய கதையை கேட்டு ஒப்புதல் அளித்தார். சிபியின் புதிய கதை ரஜினியை கவர்ந்ததால், இந்த கூட்டணி உருவாகியுள்ளது. படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
`தலைவர் 173' இயக்கப் போவது சிபி சக்கரவர்த்தி என்பது தான் இன்றைய கோலிவுட் பரபரப்பு செய்தி. தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்தை இயக்குகிறார் சிபி, இப்படி நடப்பது இதுவே முதல்முறை.
எப்படி இணைந்தது இந்தக் கூட்டணி?
ரஜினிகாந்த் - சிபி சக்கரவர்த்தி உண்மையை சொல்லப்போனால் இந்தக் கூட்டணி சில ஆண்டுகளுக்கு முன்பே இணைய வேண்டியது. `டான்' படம் வெளியாகி வெற்றி பெற்ற சமயம், அதாவது ரஜினிக்கு `அண்ணாத்த' வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்திருந்த சமயம். எப்போதும் ஒரு படம் தனக்கு பிடித்திருந்தால் அந்த இயக்குநரை அழைத்து பாராட்டுவது ரஜினியின் வழக்கம். அப்படி சிபி மற்றும் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டினார். அதே போல அந்த இயக்குநர்களிடம் தனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்று கேட்பதும் ரஜினியின் வழக்கம் தான். அப்படி சிபியிடமும் கேட்டிருக்கிறார். இந்த சந்திப்பிற்கு சில நாட்கள் கழித்து அதாவது `ஜெயிலர்' படப்பிடிப்பு துவங்கும் சில நாட்களுக்கு முன்பு சிபி - ரஜினி சந்திப்பு நடந்திருக்கிறது. அப்போது கதைக்கான ஒன்லைனை கூறி இருக்கிறார் சிபி. ரஜினியும் அதற்கு ஓகே சொல்லி டெவலப் செய்ய சொல்லி இருக்கிறார். டெவலப் செய்த கதை ரஜினிக்கு பெரிய அளவில் கவராததால் அந்த சமயத்தில் அப்படம் நடக்கவில்லை. ரஜினி ஒருபுறம் `ஜெயிலர்', `லால் சலாம்', `வேட்டையன்', `கூலி', `ஜெயிலர் 2' என அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதே சமயம் சிபி சக்கரவர்த்தி, `டான்' படத்தையடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்னொரு படம் எடுக்க தயாரானார். ஆனால் சிவாவின் தேதிகள் அமையவில்லை. சரி தெலுங்கில் நானி நடிப்பில் இந்தப் படத்தை எடுக்கலாம் என டோலிவுட் பக்கம் நகர்ந்தார் சிபி. அங்கும் சில தாமதங்கள் காரணமாக படம் துவங்க முடியவில்லை. எனவே மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை தான் சிபி இயக்க உள்ளார், `ஸ்க்ரீன்சீன்' சுதன் தயாரிக்க உள்ளார் எனவும் சொல்லப்பட்டது. அதற்கான வேலைகளும் நடந்து வந்தன.
வெளியேறிய சுந்தர் சி
இந்த சமயத்தில் ரஜினியின் `ஜெயிலர்' பெரிய வெற்றி பெற்றாலும், `லால் சலாம்', `வேட்டையன்', `கூலி' போன்றவை விமர்சன ரீதியாக இறங்கு முகமாகவே அமைந்தது. `ஜெயிலர் 2' படப்பிடப்பிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்க, அடுத்த படத்தை யாரை வைத்து செய்வது என பல இயக்குநர்களை அழைத்து கதை கேட்டிருக்கிறார். கடைசியில் சுந்தர் சியை புக் செய்து அறிவித்தனர். ஆனால் சில தினங்களிலேயே, தலைவர் 173யில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார் சுந்தர் சி. எனவே `தலைவர் 173' அந்த இயக்குநர் இருக்கை காலியானது. இதில் ரஜினியும், தயாரிப்பு நிறுவனம் ராஜ் கமலும் உறுதியாக இருந்தது ஒரே விஷயம் தான். படம் அறிவித்தபடி 2027 பொங்கலுக்கு வெளியாக வேண்டும். அதற்கு ஏற்ப ஒரு இயக்குநரை பிடிக்க வேண்டும். மீண்டும் விறுவிறுப்பாக துவங்கியது இந்தப் பட்டியலில் ராம்குமார் பாலகிருஷ்ணன், நித்திலன் எனப் பலரும் இந்தப் பட்டியலில் இருந்திருக்கிறார்கள். இதில் ஒரு கதையில் வன்முறை அதிகம், இன்னொரு கதை உருவாக்கவே தாமதம் என சில காரணங்களால் எதுவும் அமையாமல் இருந்தது. இந்த நிலையில் மீண்டும் ரஜினியின் பட இயக்குநர் சீட் காலியாகவே இருப்பதை தெரிந்து கொண்டு பலரும் முயன்று வந்தனர்.
மீண்டும் வந்த சிபி சக்கரவர்த்தி!
இந்த நேரத்தில் சிபிக்கு மீண்டும் ரஜினிக்கு கதை சொல்லலாம் என்ற எண்ணம் இருந்தாலும், ஏற்கெனவே நிராகரிக்கபட்ட இடத்துக்கு, மீண்டும் போக வேண்டுமா என்ற தயக்க இருந்திருக்கிறது. ஆனால் நண்பர்கள் சிலர் "போய் முயற்சி செய்வோம் கிடைத்தால் நல்லது தானே" என ஊக்கம் கொடுக்க மீண்டும் ரஜினி - சிபி டிசம்பர் மாதம் சந்திப்பு நடந்திருக்கிறது. முதல் 40 நிமிட கதையிலேயே ரஜினி இம்ப்ரஸ் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் டிசம்பர் இறுதி வாரத்தின் போது தயாரிப்பாளர் தரப்பிலும் கதை கேட்டு `தலைவர் 173' இயக்குநராக சிபியை டிக் செய்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இன்று இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. முதன் முதலில் ரஜினிக்கு சிபி சொன்ன கதை இல்லாமல் இது புதிய கதை என சொல்லப்படுகிறது. பரபரப்பான, கமர்ஷியலாக மாஸ் எண்டர்டெயினர் படமாக உருவாகவுள்ளது `தலைவர் 173'. இது `ஃபேமிலிமேன்' சீரிஸ் போல குடும்பத்துக்கு தெரியாமல், ரா ஏஜென்ட் ஆக பணிபுரியும் ஒருவரின் கதை என சொல்லப்படுகிறது. முன்பு பழைய பேட்டி ஒன்றில் தனது அடுத்த படம் பற்றி கூறிய சிபி `ரெண்டாவது படம் கண்டிப்பா பிளாக் பாஸ்டர் அடிச்சா மட்டும் தான் நம்மை நிரூபிக்க முடியும்' எனக் கூறி இருந்தார், அதன்படி இந்தப் படம் பெரிய ப்ளாக்பஸ்டர் ஆக வாழ்த்துகள்!

